பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

35


அறியாமை அகலும்; வேற்றுமை விலகும்; அன்பியல் தோன்றும்; அருள் மணம் கமழும். வாழ்க்கை முழுவதும் சமய உணர்வு மயமாக்கிக் கொள்ளாமல் தன்னல உணர்வுடன் வழி பாட்டினை மட்டும் செய்யும் மனிதரைப் “பொக்க மிக்கவர்” என்று அப்பரடிகள் வெறுத்துப் பேசுகிறார். “பொக்க மிக்கவர்” என்பதற்கு உள்ளீடு இல்லாத மனிதர் என்பது பொருள்.

நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவும் நீருங் கண்டு
நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே[1]

என்பது அப்பரடிகள் வாக்கு.

துய்ப்பில் துறவே தூய்மை நெறி

தமிழர் சமய வழிப்பட்ட சமுதாய வாழ்க்கையில், ‘இல்லறம்’, ‘துறவறம்’ என்ற பெரிய வேறுபாடு இருந்ததில்லை. அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டனர். இவற்றில் எது உயர்ந்தது; எது தாழ்ந்தது என்ற விவாதத்திற்கிடமில்லை. அதுமட்டுமன்று. வலிந்து மேற்கொள்ளும் துறவைத் தமிழர் நெறி ஏற்றுக் கொண்டதில்லை. நமது சமயம் துறவின் மூலம்தான் திருவருளைப் பெறமுடியும் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் துய்ப்பு நெறியில் தூய்மையை வற்புறுத்துகிறது. பச்சைத் தன்னலத்தோடு எதனை எவ்வழித் துய்த்தாலும் பாவமே அது தூய்மையில்லாத் துய்ப்பு. அங்ஙனம் துய்ப்பார் அமரரே யானாலும் “தக்கன் வேள்வித் தகர்தின்று” என்பது போல ஏசப்படுவர். நால்வரில் சுந்தரர் துய்ப்பு நெறியில் நின்றவர். ஆனால், அவர் வாழ்ந்து காட்டிய நெறி மிகச் சிறந்த அருள்நெறி. சுந்தரர் தாம் சங்கிலியாரோடு

  1. திருநாவுக்கரசர், ஐந்தாம் திருமுறை, 892