பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

386

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செய்வார்கள். ஏழை என்ற நோக்கத்தோடு செய்வார்கள்! கேட்டு விட்டான் என்பதற்காகச் செய்வார்கள். ‘தரித்திரம் பிடித்த பயல்’ என்று சொல்லிக் கொண்டே செய்வார்கள். அது அல்ல! மிக அன்போடும் பரிவோடும், வாங்குகிறவனும் சிவனின் பாத்திரம் என்று கருதிக் கொடுக்க வேண்டும். “பாத்திரம் சிவமதென்று பணிதிர்” என்பார் அப்பரடிகள். அந்தப் பாங்கோடு நடமாடுங் கோயில் என்ற பாங்கோடு கொடுக்க வேண்டும். என்பதைப் பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து, பாவியேனுடைய ஊனினை உருக்கி என்பர். இந்தப் பாவியேனுடைய ஊனினை உருக்கி என்றால் சிலபேர் கொடுக்கப் பிரியப் படுவார்கள். ‘குடிகாரப் பயல்! இவனுக்கா கொடுப்பது என்பார்கள். குடிகாரப் பயனாக இருந்தாலும் நீ கொடுத்து, அணைத்து, வைத்து, உட்கார்ந்து பேசி, மனம் மாற்றித்தான் செய்ய வேண்டும்! அவனை என்றைக்குத்தான் குடிகாரனாக இல்லாமல் மாற்றுவது? இதில் தாயாக நிற்பவள் பாவி’ என்று பார்க்கமாட்டாள். தகப்பன் சில சமயம் அப்படிப் பார்த்து விடுவான்; தெருவாயிற்படி வழியாக விரட்டி விடுவான். ஆனால் கொல்லைவாயிற்படி வழியாக வரச் சொல்லித் தாய் சோற்றைப் போட்டு விடுவாள். காரணம், தாய் அன்பு தலையாய அன்பு.

ஆதலால், ‘பாவியேனுடைய ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி’ என்றால் பாவத்தன்மைகளை மாற்றி, அறிவை நல்கி, உள்ளொளி பெருக்கி, உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து, புறம்புறம் திரிந்த செல்வமே!’ என்றார். சிலபேர் சில புத்திசாலிகளிடம் கொடுத்தோம் என்றால், அவர் நீண்ட நாட்களுக்குப் பாதுகாத்து வைத்திருக்கிறாரா என்று பின்பற்ற வேண்டும். இப்பொழுது நானும் இருபத்தேழு ஆண்டுகள் கழித்துத் தான் வந்திருக்கிறேன். தொடர்ந்து பின்பற்ற முடியவில்லை.