பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




7


ஈழத்துச் சொற்பொழிவுகள்

மாத்தளையில்


ஆன்மாக்களுக்கு ஆசையதிகம். மனிதர்களுக்கிருக்கும் ஆசையை அளவிட்டு உரைக்கவியலாது. ஆசையை அழித்து விடுதல் என்பதில் நமக்கு நம்பிக்கையில்லை. எந்த மனிதனுக்கும் ஏதாவதொன்றிலே ஆசையிருக்கத்தான் செய்யும். எல்லாச் செல்வங்களையுமேற்று-உண்டு- உடுத்து-உறங்கி வாழ விரும்புகின்றனர் சிலர்; செல்வாக்குப் பெருக்கால் சிறந்த பதவிகளைப் பெற்று வாழ ஆவல் கொள்கின்றனர் சிலர்; நாட்டை ஆளும் பேற்றினைப் பெற்று நனிசிறந்த தலைவர்களாக வாழ விரும்புகின்றனர் பலர். இவ்வாறு ஒவ்வொரு வகையான ஆசைகளுடன் மனித இனம் அலைந்து கொண்டிருக்கிறது.

நாமுங்கூட நல்ல அருள்நெறி வாழ்வு வாழ்ந்து அறச் செல்வர்களாகத் திகழ்பவர்களைக் காண ஆசைப்படுகின்றோம். ஆசையைப் பொறுத்தமட்டில் நாம் கைக்கொள்ள வேண்டியது ஒன்றேயொன்று-அதுதான் எல்லை. எதற்கும் ஒரு வேலி-எல்லை-வரையறை தேவைப்படுவது போலவே ஆசைக்கும் ஓர் எல்லை-வரையறை அவசியம் வேண்டும்.