பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

392

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழ்விலுங்கூட அகவாழ்வைப் பற்றிய சிந்தனைக்குப் பின்பே புறவாழ்வைப் பற்றிய எண்ணம் எழவேண்டும். அதுவே மனித மரபு-தமிழ் மரபு. புறப் புரட்சியின் வெற்றிக்கு அகப்புரட்சி துணைசெய்யும். மணிவாசகர் போன்ற அனுபூதி மான்கள் அகத்துறைப் புரட்சியையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து உயர்ந்தார்கள்.

எனவே, ஆசைக்கு வரையறை வகுத்து, அன்பும், அறனும் கொண்ட வாழ்வு வாழ்ந்து, புறவாழ்வின் தூய்மைக்கு இன்றியமையாத அகவாழ்வை-ஆன்மீக வாழ்வைத் தூய்மையாக்கித் துன்பம் கண்டவிடத்துத் துடித்து-உடுக்கை இழந்தவன் கைபோல விரைந்து வேண்டியது செய்து என்றும் எல்லா உயிர்களிடத்தும் பற்று வைத்து வாழவாழ்த்தி விடை பெறுகின்றோம். வணக்கம்.


நாவலப்பிட்டியில் - 1


அன்புக்கும் பாராட்டுக்குமுரிய அவைத் தலைவர் அவர்களே! அறிஞர் பெருமக்களே! பெரியோர்களே! தாய்மார்களே! நண்பர்களே ! நடமாடுந் தெய்வங்கள் கோவில் கொண்டிருக்கும் இந்நாவலப்பிட்டியிலே படமாடுந் தெய்வத்திற்கான திருமுறை விழாவிலே கலந்து கொள்ள நேர்ந்தமைக்குப் பெருமகிழ்வும் பூரிப்பும் அடைகிறோம். வரலாற்று வழியிலே கண்ணோட்டத்தைச் செலுத்துகின்ற போது, காலத்தால்- கருத்தால்-நாகரிக முதிர்ச்சியால் மூத்த பழமையுடைய இனமாக மிளிர்கிறது நமது தமிழினம். அத்தகைய இனத்தின் தனிச்சொத்துக்களாக, உலக இனங்களின் நலனில் நாட்டம் கொண்ட தத்துவங்களாக ஒளிர்கின்றன திருமுறைகள். திருமுறைகளைப் பயில்வதனாலே சமய அறிவு பெறுவதோடு, காலப்போக்கில் சமய உணர்வை-அனுபவத்தை நாம் பெறுகிறோம்; வாழ்க்கையில் இன்பத்தை அடைய அவாவுறும் நாம் திருமுறை நெறிகளால் பேரின்பப் பேற்றினையும் அடைகின்றோம். கடவுளை