பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈழத்துச் சொற்பொழிவுகள்

395


செல்கின்ற சாலையையுமே மறக்கின்றான்; வழி பார்த்து நடக்காமையினால் கல்லில் மோதுகின்றான்; காலில் புண்ணுண்டாகி விடுகின்றது “காலில் என்ன கட்டுப் போட்டிருக்கிறாயே!” என்று யாராவது கேட்டால் “கல் இடித்துவிட்டது” என்று கூறித் தன்குற்றத்தைக் கல்லின் மேல் சுமத்திவிடுகின்றான். அதுபோலத்தான் உயிர்கள் அறியாமை யினாலே பலப்பல அல்லல்களுக்கு ஆளாகின்றன.

நங்கை ஒருத்தி ஆமைக்கறி சமைக்கிறாள். அடுப்பிலே தீ மூட்டி ஆமை போட்ட உலையை ஏற்றுகிறாள்! சற்றுச் சூடானதும் ஆமையைப் பக்குவப்படுத்த எண்ணுகின்றாள். உலையிலே சிறுகுடு ஏறியதும் உள்ளிருந்த ஆமையின் உள்ளம் இன்பம் அடைகின்றது. சதா காலமும் குளிர்நீரிலே வாழ்ந்த ஆமைக்கு இளஞ்சூடு இதங்கொடுக்கின்றது, இன்பமளிக்கிறது. உலைப்பானைக்குள் மகிழ்ந்து ஓடியாடித் திளைக்கிறது. அறியாமையின் கொடுமையை அந்த ஆமை சிறிது நேரத்தில் அனுபவிக்கத்தான் போகிறது. இளஞ்சூடு கடுஞ்சூடானதும் இந்த உலகத்தையே இழக்கப் போகிறோமோ என்று உணரும் ஆற்றல் அதற்கு அப்பொழுது இல்லை. காரணம்? அந்த ஆமையின் அறியாமையே! அது போலவேதான் உயிரினங்கள் அனைத்தின் உள்ளமும் உணர்வும் இருக்கின்றன.

வாழ்க்கை என்ற அடுப்பு - அனுபவம் என்ற பானை- ஆர்வம் என்ற தண்ணீர் உயிராகிய ஆமை; ஆசையென்ற தீ எரிகிறது. உலகியல் இன்பமாகிய இளஞ்சூடு உயிரை இதப்படுத்துகிறது. பாவம்! அறிவிலே தெளிவில்லாததால் உயிர் அல்லற்படுகிறது. இத்துன்பத்தினின்று நீங்கி எல்லையில்லா இன்பம் பெற உதவும் சமயக் கோட்பாட்டின் தலையாய தொகுப்பே திருமுறைகள்.

திருமுறைகளிலுள்ள பாடல்கள் தெய்வமணங்கமழும் செய்யுட்களாகவும், தீந்தமிழ்ச் சுவை சொட்டும் தெய்வீகக்