பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

398

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சுந்தரர் வாழ்க்கைக்கடலில் ஆழக்குளித்து முத்தெடுத்தவர். அவரது காலம் கருத்துக்காலம் - கருத்தாளரை மதித்து நடந்த நாகரிகக்காலம். வழிவழியாக அந்த விழுமிய நாகரிகம் காப்பாற்றப்படாதது வருத்தத்தைத் தருகிறது. ஈன்று புறந்தருதலில் நம் தலைவர்கள் பின் நிற்கவில்லை. நாம்தான் பேணிக்காக்கத் தவறிவிட்டோம். தவற்றினை உணர்ந்து தக்கபடி செயல்பட்டால் இனியாவது நல்லகாலம் பிறக்கலாம். வையத்துள் வாழ்வாங்கு வாழ வள்ளுவர் தந்த கருத்தினை நல்லபடி நடைமுறைக்குக் கொண்டுவர நாம் இன்னும் அதிக கவனம் எடுக்கவில்லை.

நம்மிடையே இருக்கும் கருத்துக்களைப்பற்றிச் சிந்திக்காமல் இறக்குமதிக் கருத்துக்களில் எண்ணத்தைத் திருப்பி விட்டிருக்கிறோம். வீட்டுத் தோட்டத்திலே கத்தரிக்காய் காய்த்துக் குலுங்கிக் கிடப்பதைக் கவனியாது - சந்தைக்குப் போகும் நிலைமைக்கு நாம் வந்திருக்கிறோம். சுந்தரர் காலம் வீட்டிலே காய்த்த கத்தரிக்காயைச் சமைத் துண்டகாலம். விரிந்த மனப்பான்மையோடு மற்றையோர் கருத்துக்களைப் பாராட்டி நம் கருத்தை வளர்க்க நாம் முனைய வேண்டும். நம்நாட்டு நயத்தக்க நாகரிகத்தின் சிறப்பினுக்கு, நமது கருத்துக்கள் பரவிய முறையினை எடுத்துக்காட்டலாம். மற்றைய நாடுகள் இரத்தம் சிந்தியே கருத்துக்களை வளர்த்தன - பரப்பின. தென்னாட்டிலே அப்படியில்லை. கருத்து வழிப்போராட்டம் அதிகம் இருந்தது போலவே கனிவும் அவற்றுடன் இழையோடிருந்தது.

புத்திக் கூர்மையும், தூய நோக்கமும் கொண்டவர்களது ஊக்கத்தினாலேயே புரட்சிகள் உண்டாகின்றன. கருத்துவழிப் புரட்சிக்கு நமது சமயக் குரவர்கள் பலகாலமும் முயன்றிருக்கிறார்கள். மணிவாசகர் இறைவனைக் காதலியாகவும் தன்னைக் காதலனாகவும் உருவகப்படுத்திக் கருத்துப் புரட்சி செய்தார். இப்படியே, ஆண்டவனை அப்பனாக, அம்மையாக, மாமனாக, மாமியாக, உருவகித்துப் புரட்சி