பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

400

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாழை ஒண்கண் பரவையாரைத் திருவாரூரில் மணந்தார். குண்டையூர்கிழார் அன்பின் வேண்டுகோளால் ஊர் நிறைந்த நெல்லைத் தந்தவனைக் கொண்டே திருவாரூரில் தருவித்தார். இங்கு இறைவனை ஏவல்கொண்ட தன்மையை நினைக்குந் தோறும் “ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே!” என்ற அடியை எண்ணுந்தோறும் உள்ளம் உருகுகின்றது. செங்கல்லைச் செழும் பொன்னாக்கினார். அருள் நெறியை மறந்து, ஆன்ம ஆக்கத்தைத் துறந்து பொருள் நெறிப் போரில் போய்க் கொண்டிருக்கும் நமக்கு இச்செய்திகள் வியப்பைத்தான் தரும். ஆனால் சுந்தரரது அருட்பாக்களை - அவர் சிவனை வேண்டிப்பாடும் கசிவை உணர்ந்தோமானால் அவரது பாசுரங்களுக்கு மிகப்பெரு வலிமை இருந்தது-இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்வோம்.

திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்து “பிரியேன்” என்று சத்தியம் செய்தார். ஆயினும் திருவாரூர் இறைவனிடம் காதல் மீதுர அச்சத்தியத்தை மறந்தார். ஆம்! மன்றுளாடியைப் பாடவேண்டி மறந்தார். ஊர் எல்லை தாண்டியதும் கண்களை இழந்தார். இங்கேதான் சுந்தரரின் செந்தமிழ் உச்சநிலையை அடைகிறது. “மூன்று கண்ணுடையாய் என்கண் கொள்வது நீதியோ?” என்று கேட்டார். “மகத்திற் புக்கதோர் சனியெனக்கானாய்” என்று ஏசினார். “வாழ்ந்தும் போதிரே” என்று திட்டினார். இறைவன் கண்கொடுக்காமல் இருக்கமுடியுமா?

ஊடலுற்ற பரவையார்பால் மூவருமறியா முக்கண்ணனைத் தூதுவிட்டார். இதனால் கலிக்காமரின் பகையைப் பெற்றார்."இறைவனால் சந்து செய்து வைக்கப்பட்டார். திருப்புக்கொளியூர் அவினாசியிடம் முடியாத ஒன்றை முடிப்பித்தார். முதலை உண்ட பாலனை அழைப்பித்தார். அரன் அடிசேர்ந்தார் பிறர் போன்றாரல்லர். இவ்வுடலுடனேயே வெள்ளை யானையில் வேண்டிய நண்பர் உடன்வர வெள்ளியங்கிரியை அடைந்தார்.