பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

37



கடவுள் உண்டா? இல்லையா?

நம் சமயநெறி “கடவுள் உண்டு” என்ற கொள்கையில் திண்மையுடையது. நம் சமயக் கொள்கைக்கு நல்ல சாத்திர வடிவம் கொடுத்த மெய்கண்டார் கடவுளுண்மையைத் தெளிவாக விளக்குகின்றார். பொதுவாகக் கடவுள் உண்டா? இல்லையா? என்ற விவாதம் விரும்பத்தக்கதன்று. “கடவுள் உண்டு” என்ற நம்பிக்கையில் கால் கொண்ட கொள்கையினர் வழிபாட்டு அனுபவத்தில் ஈடுபடுதல் வேண்டும். “கடவுள் இல்லை” யென்னும் கொள்கையினர் அவர்கள் நம்புகின்ற அறிவில் வளர்ந்து, புதிய அனுபவங்களைப் படைக்க வேண்டும். அதை விட்டு விட்டுக் ‘கடவுள் இல்லை’ என்று சொல்வதினால் மட்டும் ஆகக்கூடிய தொன்றுமில்லை. கடவுள் உண்மையை அறிந்து அனுபவிப்பதற்கு வளர்ந்த அறிவும் அனுபவமும் தேவை. மனித குலத்தின் அறிவோ இன்னமும் பிள்ளைமைப் பருவத்திலேயே யிருக்கிறது. அது முழுமை அடைந்து விடவில்லை. வளர்ந்துள்ள இந்த அறிவு இன்னும் பொருள்களை ஆராய்ந்தே முடிந்தபாடில்லை. இறைவன் பொருளுக்குப் பொருளாக இருப்பவன். அணுக்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிலேயே ஆயிரம் முரண்பட்ட கருத்துக்கள்! இறைவன் அணுவில் அணுவாக இருக்கிறான் என்பது நமது ஆன்றோர் கண்ட உண்மை.

சென்றுசென் றணுவாய்த் தேய்ந்ததேய்த் தொன்றாந்
திருப்பெருந் துறையுறை சிவனே[1]

என்றும்,

அணுத்தருந் தன்மையில் ஐயோன் காண்க
இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க.[2]

என்றும்,

நூலுனர் வுணரா துண்ணியோன் காண்க[3]

  1. திருவாசகம், கோயில் திருப்பதிகம், 7.
  2. திருவாசகம், திருவண்டப் பகுதி, அடி, 45-46.
  3. திருவாசகம், திருவண்டப் பகுதி, அடி, 49