பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

410

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பயன்படு. வாழ்க்கையில் துணிவை - தன்னம்பிக்கையைப் பெற உங்கள் பிள்ளைகளைப் படிப்பிக்குமாறு வேண்டுகின்றேன்.

இனி, கடவுளைப் பற்றிய எண்ணம் தொழிலாளர்களுக்கு எங்கும் எப்பொழுதும் வேண்டும். வேலைக்குச் செல்வதால் கடவுளை வணங்க நேரமற்ற நிலை உங்களுக்கு உண்டென்பதை நான் உணராமலில்லை. தேயிலைக் கொழுந்தைக் கொய்யும் பொழுதும், கூடையில் போடும் பொழுதும் கடவுளை நினைக்கலாம்-வணங்கலாம். கூடையில் கொழுந்தைப் போடும் பொழுது. முருகா! முருகா! என்று சொல்லிப் போட்டால் அது முருகனுக்கு லட்சார்ச்சனையாகிவிடும். மலையின் உச்சியிலே கொழுந்து கொய்யும் உங்களுக்கு ஏறுமயிலேறி மலைதோறும் மகிழ்வுடன் உலாவரும் முருகக் கடவுளின் கருணைகிட்டும்.

ஆகவே! தொழிலாளர்கள் கட்டுக்கோப்புடன் ஒற்றுமையாக - ஒரு குலமாக வாழ்ந்து, கல்விச் செல்வத்தையும் பொருட் செல்வத்தையும் பெற்று, சிறப்புடன் திகழ்ந்து கவலையற்ற, நேர்மையும் செம்மையும் நிரம்பிய நிலையுடன், குடி கெடுக்கும் செயல்களைத் தள்ளி - திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து, யாவரும் தேர்ந்த கல்வி ஞானமெய்தி வாழ வாழ்த்தி விடைபெறுகிறோம்.


அட்டனில்


கலைகள் கருத்தைக் கவர்வன; களிப்பைத் தருவன. கருத்தற்ற கலைப் படைப்புக்கள் கால வெள்ளத்தை எதிர்த்து நீந்தி நின்று வாழ இயலாதவை. கருத்து, கற்றறிந்தோர் உள்ளத்திலே தேங்கி நின்று தேசிய உணர்ச்சிக்கும் சமுதாய உயர்வுக்கும் உதவக்கூடியது; காலத்தால் மூத்த நமது இனம் கருத்திலே நாட்டம் கொண்டதாலேதான் கருத்தரங்கங்களில் ஏறி நின்று ஏற்றம் பெற்றது; கருத்துவழி வாழ்வு வாழ்ந்து