பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈழத்துச் சொற்பொழிவுகள்

411


மகிழ்ந்தது; கருத்துக்களிலே நல்லனவும் தீயனவும் உண்டு. கருத்து என்ற பேரில் உண்டாகும் எல்லாமே வாழ்வுக்கு உகந்தனவாக இருந்ததில்லை - இருப்பதுமில்லை. இருக்கவும் முடியாது.

இயல் இசை நாடகம் போன்ற கலைகள் தமிழனைப் பொறுத்த மட்டில் மகிழ்வை ஊட்டியதோடு-வாழ்வையும் காட்டின. “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்ற உண்மையைத் தமிழர்களின் கலைகள் எடுத்தியம்பின. இதனாலே கலைவழிக் கலாசாரம் முகிழ்த்து, அன்பும் அறனும் பண்பும் பணிவும் மலர்ந்தன. கருத்து வழிப்பட்ட வாழ்வு அரும்பி மலர்ந்து மணம்வீசக் கலைகள் பயன்படவேண்டும். இசை நாடகம் போன்றவற்றை அழகுக் கலைகள் என்கிறோம். அழகுக் கலைகள் ஆழ்ந்தகன்ற நுண்ணறிவை ஆக்கவேண்டும். இறந்த காலத்தைப் பற்றிய அறிவையும் நிகழ்காலத்தை யொட்டிய கருத்தையும் வருங்காலத்தைப் பற்றிய திட்டத்தையும் தமிழ்க் கலைகள் எடுத்துச் சொல்லவேண்டும். கல்லூரிகளிலே கற்கும் சிறார்களின் நற்சிந்தனைக்கும்-நல்ல முன்னேற்றத்திற்கும் கல்லூரி விழாக்களில் இடம் பெறும் கலைநிகழ்ச்சிகள் உதவவேண்டும். பருவம் அறிந்து, பக்குவம் தெரிந்து கலை நிகழ்ச்சிகளின் மூலம் நற்கருத்துக்களைத் தூவி விடவேண்டும். இன்றைய நிலையிலே பள்ளிகளின் மூலமாகப் போதிக்க முடியாத நற்கருத்துக்களை மாணவர்க்குக் கலைகளின் வழியே போதித்து விடலாம். இப்போது கலைகளை அனுபவித்துப் போற்றும் சூழ்நிலை இளைஞர்களிடத்திலே உருவாகி யுள்ளது. அந்த நல்ல நிலையைப் பயன்படுத்தி நயத்தக்க கருத்துக்களைக் கலைகள் மூலம் கற்பிக்க வேண்டும்.

“கற்றிலனாயினுங் கேட்க” என்றார் வள்ளுவர். அதைப் போல் படிப்பிலனாயினும் பார்க்க எனலாம். இளைஞர்கள் நடிப்பு நடனம் போன்றவைகளைப் பார்த்து அனுபவிக்க விரும்புவது போல் அவைகளினூடாக வரும் கருத்துக்களை