பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

414

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மனிதனை ஆற்றுப்படுத்தி ஆவன செய்ய வேண்டும். கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்று நொந்த, நைந்த மனோபாவத்துடன் தூங்கும் ஏழையை விழிக்கவைக்க வேண்டும். சமுதாய விழிப்பிற்கும்-அகத் துறைப் புரட்சிக்கும். கலைகள் தொண்டாற்றி வெற்றிபெற வேண்டும்.

கடவுள் நம்பிக்கையில் ஊறிய-தெய்வக் கொள்கையைப் பாராட்டுகிற மனித சமுதாயத்தை உண்டாக்கி - சமவாய்ப்புச் சமுதாயத்தில் நாட்டம் கொண்டவர்களை வாழ்த்தவும் கலைகள் வழி வகுக்க வேண்டும். முதலாளி தொழிலாளிகளுக்கிடையே இருக்கிற வேற்றுமைகளை அழித்தொழித்து அருள் வெள்ளம் பெருக்கெடுத்தோடுமாறு செய்ய வேண்டும். இறைவன் ஒருவனே நமக்கெல்லாம் முதலாளி. நாம் எல்லோரும் அவனது தொழிலாளிகள் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் அரும்பி மலர வேண்டும். தாய் மொழிப் பற்றும் தாய்மொழி நாகரிகமும் தாய்மொழி வழிபாடும் எங்கும் எல்லோரிடத்திலும் பரவ வேண்டும். மனிதர்களிடையே ஏழை என்றும் அடிமை என்றும் எவருமில்லை ஜாதியில் என்ற மனோதத்துவம் தேவை. மனிதர்களிடையே பாமர மனிதர்கள் இருப்பது நமக்கு இழிவைத் தருகிறது; மரங்களிலே கூட பாமரங்கள் இல்லை. தென்னையிலோ, பனையிலோ, பலாவிலோ பாமரர்கள் உண்டா? ஆனால் நம்மிடையே எத்தனை வகைப்பட்ட பாமரர்களை உண்டாக்கி இருக்கிறோம்.

எனவே கலைகள் கருத்தைக் கொண்டனவாக - கருத்தை இருத்தி இன்ப அன்பு வாழ்வுக்கு அடிகோலுவனவாக இருக்கவேண்டும். மனித மனங்களைத் தவிர ஏனைய உயிர்களின் உள்ளங்களைப் பிணிக்கும் ஆற்றல் கலைகளுக்கு உண்டு. குறிப்பாக ஆனாயநாயனாரின் வரலாறு இசைமூலம் மிருக இனத்தையும், பறவையினங்களையும் ஈர்த்திழுத் தமையைக் காட்டி நிற்கிறது. ஆகவே கருத்தைப் பிணிக்கும்