பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈழத்துச் சொற்பொழிவுகள்

417


நலங்கள் காணும் நாள் அதிக தூரத்திலில்லை. என்றும் நம்மை அவன் ஆட்டுவிக்கிறான்; நாம் ஆடுகிறோம் - அடக்குவிக்க நாம் அடங்குகிறோம். அனாதி காலம் தொட்டே அனாதியான ஆன்மா ஆண்டவனிடத்தில் அடிமைப்பட்டி ருக்கிறதென்பதைத் தாயுமானவர் அழகுறச் சொல்கின்றார்.

இரும்புநேர் வஞ்சகக் கள்வனா னாலும்உனை
இடைவிட்டு நின்ற துண்டோ
என்றுநீ அன்றுநான் உன்னடிமை யல்லவோ
ஏதேனும் அறியா வெறுந்
துரும்பனேன் என்னினும். கைவிடுதல் நீதியோ

என்கிறார். நமக்கு வரும் இன்பதுன்பங்களுக்கு அவனே பொறுப்பாளி. இந்த விடை மிகமிக ஆழமான குளத்துநீரில் ஒரு திவலை. கற்கண்டில் ஒருதுண்டு. நானே கடவுள் - நானே பிரமம் என்றால் பொருந்துமா? “குறைவிலா நிறைவே கோதிலா அமுதே” என்கிறது திருவாசகம். பரிபூரண நிறைவுக்குப் பெயர் கடவுள். அப்படியானால் அவனின் பிரதிபிம்பமான நாம் ஏன் நிறைவற்றுத் தொல்லைப் படுகிறோம்? இறைவனின் குழந்தைகளாக, இறைவனின் அடியார்களாக நம்மை நாம் எண்ணிக்கொள்ள வேண்டும். நமது சைவநெறி வாழ்வைத் தழுவியது; வாழ்வோடு இணைந்து பிணைந்தது. நிறைவான குடும்பவாழ்வே சித்தாந்தச் சிவநெறி வாழ்வாகும்.

சேக்கிழார் பெருமான் சிவநெறித் தொண்டர்களைப் பற்றி நிறையச் சொல்லியுள்ளார். பூசலார் நாயனார் மனத்திலே கோவிலெடுத்து மகேசனைக்கண்டார். கோவிலுக்குப் போக வசதியில்லாதவர்கள் வாய்ப்பில்லாதவர்கள் மானசீகமாக இறைவனை வழிபடலாம். திருக்கேதீஸ்வரப் பதிகம்பாடிப் பாலாவியின் கரைமேல் ஆண்டவனை அகத்திலே காணலாம். நாவுக்கரசர் உழவாரத்தொண்டால் கடவுளைக்கண்டார். திருக்குறிப்புத் தொண்டர் மெய்யடி