பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈழத்துச் சொற்பொழிவுகள்

419


சைவமடங்களை நம்முன்னோர்கள் உண்டாக்கினார்கள். ஆனால் அவர்களது எண்ணம் சிலகாலம் சிதைவுற்றுப் பிறழ்ந்ததை மறுப்பதற்கில்லை. இப்பொழுது இந்நிலை மாறிவருகிறது. கைலாயத்து உச்சியுள்ள காளத்தியானைக் கண்ணிலே கண்டு மற்றவர்களுக்குக் காட்டச் சைவப் பெரியார்கள் முன்வரவேண்டும். இதனாலேதான் சைவ சமயத்துக்கு முழுநேர ஊழியர்கள் தேவை என்கிறேன். இறைவனைக் கைலாச வாசியாகவே சிலர் கருதுகிறார்கள். வான் பழித்து மண் புகுந்து மனிதரை ஆட்கொள்பவன் நம்பெருமான். ஆண்டவனை எட்டவைத்து எண்ணும் நிலை மாறவேண்டும். மண்ணிலே விண்ணைக்கண்டு விண்ணகத்து வித்தகனை நெஞ்சத்தில் அமர்த்தவேண்டும். தட்டினால் தான் திறக்கப்படும். கேட்டால்தான் கொடுக்கப்படும் என்று தமது சைவநெறி சொல்லவில்லை வேண்டப்படுவதை அறிந்து வேண்டிய முழுதும் தருபவன் இறைவன்.

ஆகவே! நால்வர் நடந்து நடந்து வளர்த்த நமது நெறி நாலாபக்கமும்பரவி விரவவேண்டும்; ஓர் ஒழுங்குமுறையான கட்டுக்கோப்பு நமக்குத்தேவை. கலப்பு, ஒழுங்கினை உண்டாக்க இடையூறாயிருக்கும். மற்றைய மதங்களிலுள்ள ஒழுங்கினை நமது மதத்தில் காண நாம் விரும்பவேண்டும். மதம் மாறும் நிலையை நம்மிடையேயிருந்து விலக்க வேண்டும் எனக்கூறி வாழ்த்தி, விடைபெறுகிறோம்.


குனுகலோயாவில்


உங்களது அன்புக்கும் பாராட்டிற்கும் முதற்கண் என் அகங்கனிந்த வாழ்த்து. கண்ணுக்கும், செவிக்கும் விருந்தளிக்கக் கூடிய அழகிய இயற்கைச் சூழலில் வாழும் உங்கள் முன் நிற்பது மகிழ்வைத் தருகின்றது. மனிதப் பிறப்பின் மாண்புறு நிலையை நயக்கத்தக்க நல்ல வழியில் அனுபவித்து உயரப் பழகிக் கொள்ளவேண்டும். மனிதன் வேகமாக உழலுகிறான். சுழலுகிறான், ஆனால் ஏன்?