பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈழத்துச் சொற்பொழிவுகள்

421


எந்தச் சோப்பையும் நாம் தேடுவதில்லை. உள்ளத்தின் அழுக்கினைப் போக்க வல்ல சோப்பை ஆண்டவனிடத்திலே தான் நாம் சென்று பெற வேண்டும். தேவாரம் திருவாசகம் போன்றவற்றைப் பணமாகக் கொடுக்க எம்பெருமான் நம் உள்ளங்களைத் தாமாகவே கழுவிச்சுத்தமாக்கி விடுவர். எல்லாருக்கும் எல்லாச் செல்வங்களையும் பெற்றுப் பெருவாழ்வு வாழ விருப்பமுண்டு. ஆனால் முயற்சி செய்து முன்னேற முடியாத சோம்பல், உயரவிடாமல் தடுக்கிறது. முயற்சியின்றியே எல்லாம் வரவேண்டும் என்று கருதும் மனப்பான்மை மறையவேண்டும். உழைப்பில் ஊக்கமும், சேமிப்பில் நாட்டமும் செலவில் சிக்கனமும் தேவை. உழைப்பைக் குறைத்துச் செலவைப் பெருக்குவதுதான் இன்றையநிலை. உழைப்பின் வழியால் வரும் வருவாய் சிறிதானாலும் செலவின் வழி விரிவாக இல்லாவிட்டால் தீங்கில்லை என்கின்றார் வள்ளுவர்.

ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை

என்பது அவரது குறள், மலரும், செடிகொடிகளும் பார்ப்பதற்கு அழகைத் தருவது போல, மனிதர்களும் அழகைத் தர வேண்டும். அத்தோடு நறுமணம் கமழுஞ் சூழலையும் உண்டாக்கவேண்டும். எல்லாருக்கும் பயன்படத்தக்க வாழ்வினை வாழவேண்டும். இடுக்கண் வரும் பொழுது சிரித்துப் பொறுத்தலும், துன்பங்கண்ட விடத்துத் துடித்துத் தோள்கொடுத்துத் துணை செய்வதும் மனித வாழ்வின் மாண்புறு தத்துவங்கள். நம்மைப் படைத்தவனிடத்திலே ஒரு வஞ்சனையும் கிடையாது-அவன் பொதுவானவன். காற்றும் நிலவும் சூரியனும் எதுவும் கேட்காது-பலன் கருதாது பயன் தருவது போல இறைவனும் எதுவும் விரும்பாது அருள் சுரக்கிறான். ஆண்டவனின் அருள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை நாம் அறிந்து அதனைப் பெற்றுப் பலனை அனுபவிக்க வேண்டும்.