பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈழத்துச் சொற்பொழிவுகள்

423


விவசாயத்துறையிலே பாடுபட்டுப் பயனடைந்தான். மற்றவனோ பாடுபட்டான். ஆனால் பயனைப் பெறவில்லை. பயன் கிட்டாததால் ஒருவித வெறுப்பு அவனிடத்தே அரும்பியது. வாழ்வில் வெறுப்புக் கொண்டவன் போல் நின்றான். அவனருகே ஒரு பெரியவர் அணுகி வேளாண்மை பற்றி விசாரித்தார். அப்பொழுதுதான் அவன் வேதனைக்கு வித்தான வேடிக்கை வெளியான்து. ‘உழுதாயா? பரம்படித் தாயா? உரம் போட்டாயா!’ என்றெல்லாம் பெரியவர் கேட்டார். “ஆம். ஆம்” என்றே அவன் பதில் சொன்னான். பெரியவருக்கு ஐயம் எழுந்தது! உடனே “விதை போட்டாயா?” என்று கேட்டார். விவசாயி விழித்தான்.

இரத்தத்தை வியர்வையாக்கி காலை முதல் மாலை வரை உடலை வருத்திப் பாடுபட்டவன் விதைபோட மறந்து விட்டான். வேளாண்மை பயன்படுமா? விதை இல்லாது எங்காவது விளைச்சல் இருக்குமா? அதுபோல. வாழ்வின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் கடவுள் நம்பிக்கை என்ற விதை வேண்டும். கடவுள் நம்பிக்கை அற்ற வாழ்வு விதைக்காத வேளாண்மைக்காரனின் நிலைக்குச் சமமானது.

நியாயத்தை, அன்பை, அருளைப் போதிக்கவே கடவுள் நம்பிக்கையும், சமயச் சார்பும் தேவைப்படுகின்றன. வாழ்க்கைக்குத் தேவையுள்ள பொருள்களான உணவு உடை உறையுள் போன்றவற்றை முயற்சியால் பெறுவது போலவே, இம்மைக்கும் மறுமைக்கும் முக்கியமாக வேண்டப்படும் கடவுள் அருளை முயன்று பெறவேண்டும். அருள் வெள்ளத்தால் அகத்துய்மை உண்டாகும். சிலரது மனங்களிலே சிங்கம், புலி, கரடி போன்றவைகள் வாழ்கின்றன. அவைகளை விரட்டி, ஆண்டவனின் அருள் வெள்ளம் பெருக்க வேண்டும். புறத்தூய்மைக்கு, பொருள் இன்றியமையாதது போல அகத்துாய்மைக்கு அருள் இன்றியமையாதது இதனை நாம் கருத்தில் கொண்டு கடவுளை வழிபடும் மனப்பழக்கத்தினை உண்டாக்கவேண்டும்.