பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈழத்துச் சொற்பொழிவுகள்

431


ஆனால் இத்தகு தகைமையை நினைந்து நினைந்து இறும்பூதடைவதில் காலத்தைப் போக்கியதாலேதான் இன்றுள்ள இழிநிலை நமக்கு வந்துள்ளது. முந்தையத் தமிழன் வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்தான்; இன்றுள்ள நாம் வாழச் சிந்திக்கின்றோம். எப்படியாவது வாழ்ந்து இந்த வாழ்க்கையை முடித்து விடுவோம் என்று நினைக்கிறோமே தவிர எப்படி வாழவேண்டும் என்று நினைக்கின்றோமில்லை. குறிக்கோள்களோடும், கொள்கைகளோடும் வாழ்வை வரையறுத்து வையத்துள் வாழ்வாங்கு வாழ எண்ணுகிறோம் இல்லை. இவ்வாறு எண்ணிய இனத்தின் வழித் தோன்றல்கள்-எப்படியாவது வாழ எண்ணாது வாழ முனைவது வருத்தத்தைத் தருகிறது. எண்ணிச் சிந்தித்து, வாழும் சமுதாயத்தை உருவாக்க நாம் அவாவுற வேண்டும். நமது மொழிவழி வந்த நாகரிகத்தைப் பேணிக்காக்க நாம் விரும்புதல் வரவேண்டும். பேரின்ப நிலைபெற உழைக்கும் உயர்ந்த உள்ளங்களை உருவாக்க வேண்டும். எங்கும் எல்லா உயிர்களிடத்தும் எப்போதும் அன்பு செலுத்தி, அறத்தால் வருவதே இன்பம் என்று கருதி அருள் வாழ்வு வாழவேண்டும்.

எங்கும் அன்பைச் செலுத்த மனத்திற்குப் பக்குவம் வேண்டும். மனோபக்குவம் இல்லாது அன்பைச் செலுத்துவ தென்பது முடியாத காரியம். அப்படி அன்பு செலுத்துவதாக இருந்தாலும் அது வெறும் நடிப்பாகவே முடியும். நிறைந்த நடிப்பு வாழ்க்கை வாழ்வதிலும் குறைந்த நல்ல வாழ்க்கை வாழ்வது சிறப்பு. மனத்தைப் பக்குவப்படுத்துவதற்கு மனத்தில் உள்ள குழப்பங்கள் குறையவேண்டும். சினம் பொறாமை பொச்சரிப்பு சந்தேகம் சபலம் முதலியன நீங்கத் தொடங்கினால் மனோபாவத்திற்கு வேண்டிய அடித்தளம் அரும்ப ஆரம்பிக்கும். மனோபக்குவ அடித்தளத்தைப் பெற ஒரேயொருவழிதான் உண்டு. அதுவே வழிபாடு. வழிபாடு மனத்தை நல்வழியில் ஆற்றுப்படுத்த எழுந்த சாதனம்.