பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈழத்துச் சொற்பொழிவுகள்

433


வழிநெடுக அதைக் கொறித்துத் தின்றுகொண்டே போகிறான். இடையிலே வள்ளுவர் எதிர்ப்படுகிறார். அவர் அவனை மறித்து “தம்பீ! உனக்கு உயிர் இருக்கிறதா?” என்று கேட்டார். அவன் திகைத்து-வெலவெலத்து-வேர்த்துக் கொட்ட விழித்தபடி நின்றான். சற்று நேரம் பொறுத்து “என்ன ஐயா கேள்வி இது? நான் நடக்கிறேன். மூச்சு விடுகிறேன். முறுக்குத் தின்கிறேன். என்னைப் பார்த்து-உனக்கு உயிர் உண்டா? என்று கேட்கிறீர்களே” என்றான். “சரியப்பா நீ அந்தக் கடையிலே முறுக்கு வாங்கியபொழுது, இரண்டு வேளையாகச் சாப்பிடாமல் வாடி வதங்கிய நிலையில் நின்றானே ஓர் ஏழை! நின்றதோடல்லாமல் பசிக்கிறது என்றும் கெஞ்சிக் கேட்டானே! நீ வைத்திருந்த முறுக்கில் பாதித் துண்டையாவது கொடுத்திருக்கக் கூடாதா? நீ அப்படிக் கொடுக்காது வந்ததுதான் என்னைச் சந்தேகிக்க வைத்தது” என்றார் வள்ளுவர். இதிலுள்ள நகைச் சுவையையும் பகுத்துண்டு பல்லுயிரோம்பும் பண்பையும் நாம் நினைத்து நினைத்துச் சிரிப்பதோடு சிந்திக்கவும் வேண்டும்.

நமது “சிந்தனை அருளார்ந்த சிந்தனையாக - அன்பு வழிச் சிந்தனையாக மிளிர வேண்டும். அப்பொழுதுதான் நமது அகத்திலேயுள்ள ஆத்திரம் கொதிப்புப் போன்றவை அடங்கி-ஆன்மீக வாழ்வுபெற வழி ஏற்படும். அகத்தின் ஆத்திரமும், பொறாமை எரிச்சல் போன்ற தீய உணர்வுகளும் களையப்படவேண்டும். உலையிலே வெந்து கொண்டிருக்கும் அரிசி பொங்கினால், ஒரு கரண்டி மூலம் கிண்டிக் கிளறி விட்டால் அவ்வரிசி நன்றாக நின்று வேகும். இன்றேல் அரிசி வேக உதவும் நீர் வெளியாவதோடு, சோறாக்க உதவிய நெருப்பையும் அணைத்துவிடும். அதே போல மனிதனின் ஆத்திர உணர்ச்சி பொங்கி வராதபடி தடுக்கப்படல் வேண்டும். இன்றேல் ஆத்திரத்தால் அறிவு மங்க-செயலாற்றத் தகுந்த ஆற்றலும் அழிந்து-காரிய சாதனைக்குரிய அடிப்படைச் சூழலும் கெட்டுவிடும்.