பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குறிப்பாகச் சிலைகளை வழிபடுவதை உடன்பட மறுக்கிறார்கள். ஆனால், நமது சமயம் திருவுருவ வழிபாட்டை வற்புறுத்துகிறது. மெய்கண்ட தேவர் சீவன் முத்தர்களுக்குக் கூட ஆலய வழிபாட்டை வற்புறுத்துகிறார்:

மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தானும் அரனெனத் தொழுமே.[1]

என்பது அவர் வாக்கு காற்றோட்டம் இல்லாமல் வெப்பத்தால் புழுக்கம் ஏற்படுகிறபொழுது விசிறியைக் கொண்டு விசிறிக் கொள்கின்றோம். காற்றோட்டம் வந்த பொழுது விசிறியை எறிந்துவிடுகின்றோம். அதுபோல ஞானம் வராதபொழுது திருவுருவ வழிபாட்டைச் செய்ய வேண்டும். ஞானம் வந்துழி விட்டுவிடலாம் என்றும் சிலர் கூறுவர். காற்றோட்டம் இல்லாமல் புழுக்கம் வந்தது என்றால் காற்று ஒருபொழுது வீசுதலும் வீசாமையும் பெறப்படுகிறது. காற்றோட்டம் வந்துழி விசிறியை எறிந்துவிட்டால் மீண்டும் காற்றோட்டம் இல்லாதபொழுது என்ன செய்வது? ஆதலால் உயிர் முற்றாக முழுமைநலம் எய்தும்வரை எந்தச் சாதனங்களையும் இழத்தல் நன்றன்று. இறைவன் உருவ மற்றவன்; அருவ நிலையினன் என்பதும் நமது கோட்பாடே. ஆனால் எல்லாம் வல்ல இறைவன் உருவங்களை ஏற்க முடியும் என்பதில் என்ன தவறு? ஆட்கொள்ளும் வழி ஆட்கொள்ளப்படும் உயிர்களின் தரத்தைப் பொறுத்ததேயன்றி, ஆண்டவன் தகுதியைப் பொறுத்ததாக அமையாது.

உயிர்கள் ஓர் உருவத்தைப் பற்றி நின்றுதான் சிந்திக்க முடிகிறது. அதனால் உருவமற்ற இறைவனும் உருவம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. உருவத்தைப் பெறாத ஒன்று அனுபவத்திற்கு வராது. மணம் உருவமற்றது. ஆனால் மலரின் வடிவத்தில் மணம் பொருந்தும் பொழுதும், மணம் நுகரும் மூக்கின் வடிவத்தில் உறவு கொள்ளும்

  1. சிவஞானபோதம் சூத்திரம், 12.