பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

45


பொழுதும்தான் மணம் அனுபவத்திற்கு வருகிறது. ஒலிக்கு வடிவம் இல்லை. ஆனால் ஒலி, சொல் வடிவம் பெற்று, உருவடிவம் பெற்று செவியொன்றில் உறவு கொள்ளும் பொழுதுதான் அனுபவத்திற்கு வருகிறது. மின்னாற்றலும், உருவங்களின் வாயிலாகத்தான் அனுபவத்திற்கு வருகின்றது. நாம் உருவத்தை வணங்கவில்லை. உருவத்தின் வாயிலாக, இல்லை, உருவத்தில் இறை நிலையைக் கருதியே வழிபடுகின்றோம். நாம் தொழுவது சிலையையன்று. சிலையை மையமாகக் கொண்ட சிந்தனையைத்தான். நம்மீது உள்ள கருணையினாலே இறைவன் உருவங்களில் எழுந்தருளி ஆட்கொள்கிறான் என்பதுதான் நமது கொள்கை, உருவங்களாக எண்ணித் தொழுதல் நமது வழிபாட்டு முறையன்று. உலகியலில்கூட சில பொருள்கள் உருமாறின பிறகு, உருமாறிவிட்டிருக்கும் நிலையிலுள்ள பெயரைத்தான் குறிப்பிடுவோமே தவிர பழைய நிலைப்பெயரைக் குறிப்பிடுவதில்லை. இரும்பு அறிவியல் முறையில் ஒலிபெருக்கியாக்கப் படுகிறது. அதற்கு ஒலிபெருக்கி என்றுதான் பெயர். அது செய்யப்பெற்ற இரும்பை எண்ணி ஒலிபெருக்கியை இரும்பு என்றுகூற இயலாது; கூறக்கூடாது. அரிசி வெந்து சோறான பிறகு, அது சோறே தவிர அரிசி அன்று. எழுத்துகள் உணர்ச்சி வெள்ளம் படைத்த கவிஞனால் முறையாகக் கோக்கப்பெற்றுக் காவியம் ஆக்கப் பெற்றால் அது காவியமே. எழுத்துகள் உண்மையினால், அது அகர நெடுங்கணக்கு ஆகாது. அதுபோலத் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற திருமேனிகள் கற்களாலோ, உலோகத்தாலோ ஆக்கப் பட்டிருக்கலாம். ஆனால் வழிபடுவோர் கல்லையோ உலோகத்தையோ உள்ளத்தில் நினைந்து வழிபடவில்லை. இறைவனையே எண்ணி வழிபடுகின்றனர். அதுதான் திருவுருவ வழிபாட்டின் தத்துவம். இதனை மாணிக்கவாசகர்,