பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யில் மலர்ந்த சொர்ணாம்பாள் அறக்கட்டளையின் சார்பில் இன்று பேசிய பேச்சின் உட்கிடை வருமாறு: மனிதன் விலங்குத் தன்மையிலிருந்து விலகி மனிதத் தன்மையைப் பெற்று இறைநிலையை எய்த வேண்டும்; உயிர்கள் இயல்பாய குறையினின்றும் நீங்கி நிறைநலம் பெறச் சமயம் துணை செய்கிறது; கல்வியிலும் அறிவு சிறந்தது: அறிவிலும் ஞானம் சிறந்தது; ஞானத்தை நல்கும் சமயம் ஒரு வாழ்க்கை முறை; சமயங்கள் அனைத்தும் மனித குலத்தின் ஈடேற்றத்திற்காகவே தோன்றின. சமயப் பூசல்கள் உலகியல் நலன்களுக்காகச் சமயத்தின் பேரால் நிகழ்ந்தன - நிகழ்வன. சமய நெறி உணர்த்துவது வேறுபாடுகளுக்குள்ளும் விழுமிய ஒருமைப் பாட்டைக் காண்பதுதான். ‘வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின் விளங்கு பரம்பொருளே நின் விளையாட்டே’ என்று தாயுமானார் அருளியமை நினைவு கூர்ந்து சமய நெறிகளைக் கடந்த பொதுமை நெறி நிற்கவேண்டும். அதுவே மனித உலகத்தை ஈடேற்றுவதற்குரிய உயர்ந்த நெறி. அந்நெறியே தமிழர் சமய நெறி.

தமிழினம் மிகத் தொன்மையான காலத்திலேயே சமய வாழ்க்கையை மேற்கொண்டது. சங்க கால வாழ்க்கை ஒரு முழுமையான சமய வாழ்க்கை. ஆதலால் பக்திக்குத் தணி இயக்கங்களும், இலக்கியங்களும் இருந்ததில்லை. சங்க காலத்துக்குப் பின் நமது சமய நெறியில் பண்பாட்டில் ஏற்பட்ட வீழ்ச்சியை எடுத்துக்காட்டி நிறைவு செய்யப் பக்தி இயக்கமும், பக்தி இலக்கியங்களும் தோன்றி வளர்ந்தன.

தமிழர் சமயம் நம்பிக்கைக்குரியது. நல்லெண்ணத் திற்குரியது, அறிவாராய்ச்சியில் அமைந்தது. சிந்தனையின் எல்லைவரை வினா எழுப்பி வளர்ந்த நெறி. அதனால் அதற்குச் ‘சித்தாந்தம்’ என்று பெயர். நமது சமயத்தில் முப்பொருள் கொள்கை விழுமிய கொள்கை இறை, உயிர், தளை என்பன என்றும் உள.