பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

49

கடவுள் உண்டா? இல்லையா? என்று விவாதம் நிகழ்த்த இது உரிய காலமன்று. அறியாமையே தோன்றாத அறிவு உலகத்தில் தோன்றிவிடுமானால், இனி ஆராய வேண்டிய பொருள்கள் இல்லையென்ற நிலை தோன்றி விடுமானால் அதைப் பற்றி ஆராயலாம். கடவுள் இல்லை என்பவர்கள் மீது நமக்கு வருத்தம் இல்லை. அவர்கள் கடவுளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தவும் நாம் தயாராக இல்லை. நம்முடைய கொள்கையே கடவுள் எல்லாமாக இருக்கிறார் என்பதுதான். கடவுள் உண்டு என்போர் கடவுளை வழிபட வேண்டும். கடவுள் தன்மையெனப் பாராட்டப் பெறும் அன்பு, அருள், ஒப்புரவுக் கொள்கை நாட்டில் தழைக்கும்படி கடவுள் நம்பிக்கை யுடையோர் வாழ்ந்து காட்டவேண்டும். சின்னங்களும் சடங்குகளும்தான் கடவுள் நெறி என்று மக்களை நம்ப வைக்கக்கூடாது. மழை பொழிந்ததன் விளைவை மண் காட்டுவதைபோல், சமய நெறி நின்று வாழ்வோரின் சால்பினை வையகம் காட்டவேண்டும்; விளைவுகள் காட்டவேண்டும். அதாவது துன்ப நீக்கமும் இன்ப நிறைவுமாகும்.

பழமை, புதுமை இவை உண்மையில் வாழ்க்கையில் ஈடுபடாதவர்களுடைய கற்பனை; பட்டி மன்றங்களுக்குப் பயன்படும் பொய்ம்மை; பழமை புதுமைக்குத் தாய். புதுமை பழமையின் சேய், வாழ்க்கை வாழ்வதற்கென்பது நம்முடைய நெறி. உலகம் துன்பமன்று வாழ்க்கையும் துன்பமன்று. ஒரோவழி துன்பமாக இருந்தாலும் இன்பமாக மாற்ற வேண்டும். இன்னாதம்ம உலகம் இனிய காண்க என்பது பக்குடுக்கை நன்கணியார் காட்டிய நன்னெறி.

சைவ நாயன்மார்கள் சமணத்தை எதிர்த்துப் போராடியது, வழிவழி வளர்ந்து வந்த தமிழினத்தின் நாகரிகத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கேயாம். அதுவும் கூடத் தனித்துச் சமணர்கள் வளர்ந்த பொழுது