பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நாயன்மார்கள் எதிர்க்கவில்லை. மருணீக்கியார் சைவ சமயத்திலிருந்து சமணத்திற்குச் சென்றபொழுது சைவர்கள் பதற்றமடையவில்லை. அதுதான் நமது சமய நெறியாளர்கள் கண்ட உயர்ந்த பண்பாடு. ஆனால், மருணீக்கியார் திரும்பவும் சைவத்திற்கு வந்தபொழுது சமணர்கள் ஆத்திரப்பட்டனர். அரசினைக் கையகப்படுத்திக்கொண்டு கொடிய தண்டனைகளைச் செய்வித்தனர். ஐரோப்பிய வரலாறுகளில் கிறித்தவ சமயத் தலைவர்கள் அரசைக் கைப்பற்றிக் கொண்டு மற்றச் சமயத்தினர்க்குத் துன்பம் செய்ததை வரலாற்றில் படித்திருக்கிறோம். அதே தவற்றை, நெறியல்லா முறையை இங்கே சமண முனிவர்கள் மேற்கொண்டனர். இஃது ஒரு தற்காப்புப் பணி.

நமது சமயத்தில் தீண்டாமை இல்லை, தீண்டாமையை அறவே அகற்றவேண்டும். ஒன்றே குலம் என்ற திருமூலர் ஆணையின் வழி ஒரு குலம் அமைக்கவேண்டும். அருளின் விளக்கமாகிய ஒப்புரவுக் கொள்கையால் வறுமையை மாற்றவேண்டும். வளம் படைத்திடுதல் வேண்டும். வாழ்க்கை முழுவதும் சமயச் சீலம் இடம் பெறுமாறு வாழ்ந்துகாட்ட வேண்டும். துய்த்தல் தவறன்று; ஆனால் துய்த்தலில் அன்பு தேவை; துறவின் தொடக்கம் தேவை. துறவின்வழித் துய்த்தலே இன்ப அன்பினை விளைவிக்கும் துய்ப்பு.

வழிபாடு ஒரு சடங்குமட்டுமன்று. புலன்களைத் துய்மை செய்வது; பொறிகளை இன்பமயமாக்குவது. பக்தி ஓர் உணர்வு; பக்தி திருத்தொண்டுக்கு ஊற்று; தொண்டு அதன் விளைவு. இப்பண்புகள் பல்கிவளர நாள்தோறும் இறைவனை வழிபடவேண்டும்.

இறைவன் அருஉருவினன். ஆயினும் உயிர்கள் எளிதில் நினைத்திட அவன் உருவமேற்றுக் கொள்கின்றான். நாம் வணங்குவது உருவங்களையன்று; உருவங்களை மையமாகக் கொண்ட கடவுள் தன்மையையே. எல்லாமாக இருக்கும்