பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

51

கடவுள் ஏன் உருவங்களாக இருக்கமுடியாது? சின்னங்கள் சடங்குகள் இல்லாத சமயம் உலகில் எதுவுமில்லை; உலகில் எந்த இயக்கமும் இல்லை. திருக்கோயில் உள்ளிருக்கும் சிவன் தன்னைச் சிவனெனவே தேறி வழிபாடு செய்வோம். ஒன்றியிருந்து வழிபாடு செய்வோம். அவன் திருவடிப் போதுகளில் மலர்களை இடுவோம். உயிர்க் குலத்தை வாழ்விப்போம்; பணிகளைச் செய்வோம்; இத்தகு சிந்தனைகளை இன்று நினைவிற்குக் கொண்டு வந்தோம்.

ஊர்களைச் சாலைகள் இணைத்து வெற்றி பெற்று விட்டன. அண்டங்களை வானவெளிச்சாலைகள் இணைத்து வெற்றி பெற்று விட்டன. ஆனால், மனித உள்ளங்களை இணைக்கக் கண்ட நன்மை பெருகு அருள்நெறி, நாட்டில் வளரவில்லை; நாட்டு மக்களின் நெஞ்சங்கள் அருள்நெறி வழி இணைக்கப் பெறவில்லை. மனித உள்ளங்கள் அருள் நெறி வழி இணைக்கப்பெறும்பொழுது மண்ணகம் விண்ணக மாகும்; அப்போது வான்முகில் வழாது பெய்யும்; மலிவளம் சுரக்கும்; குறைவிலாது உயிர்கள் வாழும். நாட்டில் நல்லாசு நிலவும், அறநெறிகள் வளரும்; தவநெறி தழைக்கும்; நீதி நிலைபெறும்; சைவம் நின்று நிலவும். அந்த நன்னாளை எண்ணிப் பிரார்த்தனை செய்வோம்.

மேற்கோள் விளக்கம் 

1. தாயுமானவடிகள் திருப்பாடல்கள், ஆனந்தமானபரம், 9,
2. திருவாசகம், திருப்புலம்பல், 3.
3. திருஞானசம்பந்தர், 340 தனித்திருவிருக்குக்குறள், 3.
4. திருக்குறள், 1110.
5. தாயுமானவடிகள் திருப்பாடல்கள், கல்லாலின், 25.
6. திவ்வியப் பிரபந்தம். 2573.
7. திருவாசகம், போற்றித்திருவகவல் அடி, 164-165.
8. புறம். 192.