பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

59


இருந்ததில்லை. அதனால்தான் எளிதில் எல்லோரும் வழிபடத் தக்கவாறு மணலில், சாணத்தில் இறைவனை எழுந்தருளச் செய்து வழிபாடு நிகழ்த்தும் வழக்கம் இருந்திருக்கிறது. சண்டீசர் மணலில்தானே திருமேனி செய்து வழிபட்டார்! காலம் செல்லச் செல்ல, காலத்தில் கரையாதவாறு நிலையான திருமேனிகள் அமைத்து வழிபாடு செய்யும் உணர்வு மேலிடக் கற்களால் ஆன திருமேனிகள் தோன்றின. வழிபாட்டில் ஆர்வம் பெருகப் பெருகத் தாம் வழிபடும் திருமேனிக்குத் திருக்கோயில் அமைக்கும் ஆர்வம் மக்கள் மன்றத்தில் வளர்ந்தது. மக்கள் மன்றத்தின் ஆர்வத்தை அறிந்த தமிழக மன்னர்கள் திருக்கோயில்கள் பலவற்றை எழுப்பினார்கள். திருக்கோயில்கள் தோன்றிய பிறகும் கூட மக்கள் தாமே சென்று இறைவனுக்குப் புனலும் பூவும் சொரிந்து வழிபாடு செய்து வந்தனர்.

இங்ஙனம், பக்தி நெறியில் வளர்ந்த சமயம், பாதுகாப்பு என்ற பெயரில் தத்துவ, சாத்திரச் சூழலுக்குள் அடி வைத்தது. ஆகமங்கள் தோன்றுகின்றன. அன்பிற்குத் தடை விதித்து அறிவுக்கும் ஆட்சிக்கும் வழி வகுக்கப்படுகிறது; பொதுமை மறைகிறது! திருக்கோயில் வழிபாட்டை என்றென்றும் செய்வோரென்று தம் குடியில் மூத்தோர் சிலரை நியமிக்கின்றனர். அவர்கள் வல்லுடும்பாகப் பற்றிக்கொண்டு மேட்டுக் குடியினராயினர்; கடவுளுக்கு உரிமைச் சுற்றம் பூண்டனர்; மற்றவர்களை ஒதுக்கினர்; எளியோரை எட்ட நிறுத்தினர்; உடையோரை உவந்து வாழ்த்தி மடி நிறையப் பெற்றனர். இது கோயில் முறை தெரிக்கும் வரலாறு!

திருக்கோயில்கள் தோன்றிய காலக்கட்டத்தில் கூட - ஏன்? அவை தோன்றிப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் கூடத் தாமே பூவும் புனலும் சொரிந்து வழிபடும் உரிமை மக்களுக்கு இருந்தது. அதனாலன்றோ, தமிழகத் திருத்தல வரலாறுகள் அனைத்தும் வாலி பூசித்தது, தருமன் பூசித்தது, இராமன் பூசித்தது, இராவணன் பூசித்தது, நளன் பூசித்தது,