பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்றும் - இவை மட்டுந்தானா? யானை பூசித்தது, குரங்கு பூசித்தது, எறும்பு பூசித்தது. நண்டு பூசித்தது என்றெல்லாம் கூட் திருக்கோயிற் புராணங்கள் உள்ளன. இதுவே, பண்டைய திருக்கோயில்களின் நிலை.

இடைக் காலத்தில் திருக்கோயிலைத் தொழிற் கூடமாக்க நினைத்தவர்கள், மற்றவர்கள் வழிபடும் உரிமையை மறுத்தனர். அதற்குப் “பரார்த்த பூசை” என்று ஒரு பெயரைச் சூட்டினர். பெயர், நல்ல பெயர்தான்! ஆனால் வைதிகர்கள் அதற்குச் சொல்லும் பொருள்தான் பொருத்தமாக இல்லை. பரார்த்தம் என்னும் சொல்லுக்குப் பொருள், மற்றவர்களுக்காகச் செய்வது என்பதுதான். அதாவது, நாள்தோறும் ஒரு சின்னத்தில் இறைவனை எழுந்தருளச் செய்யும் பயிற்சி அல்லது செயல்முறை. இது எளிதன்று. அதன் காரணமாகப் பலர் வந்து வழிபட்டுப் பயன்பெறத்தக்க வகையில் ஒருவர் ஒரு திருமேனியில் இறைவனை எழுந்தருள்வித்து, மற்றவர்கள் வழிபாடு செய்து கொள்ளத் தருதல் என்பதே பரார்த்த பூசை என்பதன் பொருள். ஆனால் நம்மில், மூத்த குடியினராய் அமர்த்தப் பட்டவர்கள் நம்மில் உயர்ந்தோராகி என்றென்றும் திருக்கோயிலில் நிலையான உரிமை பெறவும், பெரும்பான்மையான சமூகத்தாரை விலக்கி வைக்கவும் ஆசாரம், ஆகமம் என்ற பெயரால் தடை விதித்தனர். அதனாலேயே நமது நாட்டில் சமயம் அனுபவத்திற்கு வராது போயிற்று.

வழிபாட்டின் பழைய முறை

நமது முன்னோர்கள் திருக்கோவிலுக்குச் சென்று பூவும் புனலுமிட்டு வழிபட்டனர் என்பதற்கு முன்னர் எடுத்துக் காட்டிய தல புராணங்கள் சான்று கூறும். நமது திருமுறைகள் தொட்ட தொட்ட இடங்களில் எல்லாம், மக்கள் தாமே வழிபாடு செய்து கொண்டனர் என்றே பேசுகின்றன.