பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழ்ந்திருப்பார்களானால், திருக்கோயில்கள் தூய்மையாக விளங்கியிருக்கும். திருக்கோயில்கள் அன்பின் களனாகவும், அருளின் பெட்டகமாகவும் விளங்கியிருக்கும். இன்றைய நிலையில் திருக்கோயில் காவலையே நம்பிக் கிடக்கிறது. பொதுமக்கள் வழக்கத்தின் காரணமாகவும், மன அமைதிக்காகவும் வழிபாட்டுக்கு வருகிறார்கள்; ஏதோ செய்து கொண்டு போகிறார்கள். ஆனால், ஞானானுபவம் அவர்களுக்குச் சித்திக்கவில்லை. பழுத்த அனுபவத்தில் தோன்றிய வழிபாடு, இன்று முதிராப் பிள்ளைகளின் சிறு விளையாட்டுப் போல் அமைந்துவிட்ட கொடுமையை நினைந்து உட்கி வெட்கமுறாதார் நெஞ்சம் என்ன நெஞ்சம்?

ஏன்? நால்வர்களும், ஆழ்வார்களும் அவதரிக்காத வடபுலத்தில் இன்றும் பொது மக்களுக்கு வழிபாட்டுரிமை இருக்கிறது. காசித்திருக்கோயிலுக்குள் பக்தர்கள் சென்று, அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனைக் கங்கை நீர் கொண்டு திருமுழுக்குச் செய்து வழிபாடு செய்து கொள்ளலாம். இங்ஙனம் நிகழ்வதால் எந்தப் பண்டாவும் அங்குத் தம் வழிவழி உரிமையை இழக்கவில்லை. சாதி வேற்றுமைகளை எதிர்த்துப் போராடி ஒரு குலம் அமைக்க முயன்ற ஞானிகள் தோன்றிய மண்ணில் பக்தர்களுக்குத் திருக்கோயில் வழிபாட்டுரிமையை மறுப்பது நியாயமும் அன்று; நெறியுமன்று முறையுமன்று.

எல்லோரும் வழிபடுவோம்

எல்லோருக்கும் திருக்கோயில் கருவறைக்குள் சென்று புனலும் பூவுமிட்டு வழிபாடு செய்யும் உரிமை வேண்டுமென்பதால் ஏதோ தான்தோன்றித்தனமாகத் திருக்கோயிலைத் திறந்து விடுதல் என்பது பொருளன்று. எத்தகைய உரிமையையும் சில கடமைகள் வழியே தான் பெற முடியும். பிறப்பின் காரணமாகத் தடையிருக்கக் கூடாது என்பதுதான்