பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



சமய நிறுவனங்களும் திருக்கோயில்களும்
சமய - சமுதாயப்பணி மன்றங்களே

பழங்காலத் திருக்கோயில்கள் இறைவன் திருவோலக்கம் கொண்டருளும் திருவருள் நிலையங்களாக விளங்கின; அது மட்டுமன்றி நமது சமுதாயத்தின் பொது இடங்களாகவும் விளங்கின; மக்கட் பணி மன்றங்கள் ஆகவும் விளங்கின. பழங்காலத் திருக்கோயில்களில் தமிழ்ச் சங்கங்கள் இருந்தன. தமிழறிஞர்களிருந்து தமிழாராய்ந்தனர்; கல்வி பயிற்றுவிக்கும் கூடங்கள் இருந்தன; கலைபயில் கழகங்களிருந்தன; நாடக அரங்குகளிருந்தன; மருத்துவ மனைகள் இருந்தன என்பதைத் தமிழகத்திருக்கோயில்களின் கல்வெட்டுகள் மூலம் அறியலாம். ஏன்? பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் “முறை மன்றங்களும்” இருந்தன. கிராமச் சமுதாயத்தை வழி நடத்தும் கிராம சபைகள் - ஊர்ச் சபைகள் திருக்கோயில்களில் அமைந்திருந்தன. இன்றைய நம்முடைய திருக்கோயில்கள் அந்த அமைப்பில் இல்லை. அவை முற்றாகச் சமுதாயத்தினின்றும் விலகி விட்டன. சமுதாயப் பணிகளை அவை மறந்துவிட்டன. நமது சமய நிறுவனங்களாகிய திருக்கோயில்கள் - திருமடங்கள் இந்த வகையான பணி செய்வதில் இடைக்காலத்தில் நெடுந்தொலைவு விலகிவிட்டன. அண்மைக் காலமாக ஓரளவு மாறுதல் ஏற்பட்டு வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இந்த வகையில் தருமபுர ஆதீனமும், குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனமும், பேரூர் சாந்தலிங்கர் திருமடமும், சிரவணபுரம் - கெளமார மடாலயமும், மயிலம் பொம்மபுரம் ஆதீனமும், திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடமும் செய்துவரும் பணிகள் பாராட்டுதலுக்குரியன. இந்தப் பணியை ஏற்றுக் கொண்ட நிறுவனங்கள் மேற்சொன்ன சிலவேயாம். இன்னும் பல நிறுவனங்கள் இந்த நினைவிற்குக்கூட வராதது வருந்தத்தக்கது. தமிழகத்