பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நடமாடுங் கோயில் நம்பர்க்கொன் றீயில்
படமாடுங் கோயில் பகவற்கஃ தாமே[1]

என்னும் திருமந்திரம் அறிந்து உணரத்தக்கது.

திருமடங்களின் தோற்றமும் நோக்கமும்

நமது சமய அமைப்பில் திருமடங்களுக்குத் தனியிடம் உண்டு. பழங்காலச் சமுதாய அமைப்பில் திருமடங்கள் இருந்ததில்லை. திருமடங்கள் சில நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டனவேயாம். நமது சமயநெறி வாழ்க்கையோடிசைந்திருந்த காலத்தில் திருமடங்களின் தோற்றம் அவசியமில்லாம லிருக்கிறது. பின்னர், கால வளர்ச்சியின் காரணமாகவும் அயல் சமய நெறிகளின் ஊடுருவல் காரணமாகவும் சமயப் பாதுகாப்புப் பணிகளைச் செய்ய வேண்டியது அவசியம் என்று உணர்ந்த ஞானிகள்-சமுதாய வளர்ச்சியில் சிந்தனை செலுத்திய ஞானிகள்-திருமடங்களைக் கண்டனர். தமிழகத்தின் தலைசிறந்த தாளாளர்களும் மன்னர்களும் சமயப் பாதுகாப்புப் பணி கருதி நிறையப் பொருள்களைத் திருமடங்களுக்கு அளித்தனர். திருமடங்களின் தலையாய பணி, சமயப் பாதுகாப்பேயாம். சமயப் பாதுகாப்பு என்பது சமயத்தை, தத்துவங்களை மட்டும் பாதுகாப்பதன்று. கோவிலையே பாதுகாப்பது என்பதுமன்று. நமது சமய நெறியில் நின்றொழுக வேண்டிய மக்களை அறியாமையினின்று விலக்கி, அறிவு நெறியில் ஆற்றுப்படுத்தி அருளார்ந்த சமய அனுபவத்தில் கொண்டு வந்து நிலை நிற்கும்படி செய்தலேயாம். மக்கள் மன்றத்தில் சமய உணர்வைப் பாதுகாப்பதே.

திருமடங்களின் இன்றைய நிலை

சாதாரண சராசரி மக்களிடம் சமய வாழ்க்கையின் தேவையை உணர்த்துவதும், சமய உணர்வைப் பெற்றவர்களுக்குத் 'தீக்கை' முதலியன செய்வித்து, அவர்களை

  1. திருமந்திரம், 1821.