பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெறவில்லை. தமிழ்நாட்டுச் சட்டசபையின் வாயிலாகப் பெற்றார்கள் என்றால் என்ன பொருள்? அறவுணர்வில் செய்யப்படாத ஒன்றினைச் செய்யும்படி கட்டுப்படுத்துவது சட்டம். சமயத் தலைவர்கள் அறநெறிப்படி செய்யத்தவறிய ஒன்றினைச் சட்டம் செய்யும்படி வற்புறுத்தியது. சட்டம் தோன்றிய பிறகு தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்து அமைச்சர்களாக வந்தவர்களுக்குப் பொன்னாடை போர்த்தத் தவறினார்களல்லர். இந்த முரண்பாடுகள் ஏன்?

உடனடித் தேவை

சமய நிறுவனங்கள் சமயத்தைப் பாதுகாத்து, சமய நெறி வழிப்பட்ட சமுதாயத்தை அந்த நெறியில் நிறுத்துதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளாததால் சமுதாயத்தின் அடிமட்டத்தில் கிடக்கும் நம்முடைய சமயத்தைச் சார்ந்த மக்கள் இன்னமும் மத மாற்றங்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். கடந்த பல ஆண்டுகளாக மக்கள்தொகை வளர்ச்சிக் குறியீட்டு எண்களைக் காணின், நமது சமய வழிப்பட்ட சமுதாயத்தின் வீழ்ச்சியை உய்த்துணரமுடியும். ஏன் இந்த வீழ்ச்சி? மக்களைத் தழுவி நின்று பேணிப் பாதுகாக்கும் பணியைச் சமய நிறுவனங்கள் மேற்கொள்ளாததால்தானே; ஆதலால், சமய நெறியை உயிர்ப்புடன் பாதுகாக்கவும் சமய வழிப்பட்ட சமுதாயத்தைப் பாதுகாக்கவும் சமய நிறுவனங்களின் இன்றைய நடைமுறையும் ஆட்சி முறையும் துணை செய்யா. துணை செய்யவும் இயலா அவை சாதி வழிப்பட்ட அமைப்புகளாகவும் இயங்கிவிட்டன. அரசும் அவற்றை நேரிய வழியில் நெறி முறைப்படுத்த இயலாத நிலையில் இருக்கிறது. காரணம் அரசு, சமயச் சார்பற்ற அரசு. ஆதலால், அரசு ஏதாவது சமயச் சீர்திருத்தங்கள் - நடைமுறை மாறுதல்கள் உண்டாக்க முயன்றால் முறையீட்டு மன்றங்கள் தலையிடும். ஆதலால் நமது சமயத் தலைவர்களும், சமய நெறியில் நிற்கும் பெரியோர்களும் அறிஞர்களும்