பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

77


உளமார நினைந்து பார்த்து ஒரு மாற்றத்தைக் காண முன் வரவேண்டும். இந்த வகையில் நமது எண்ணத்தில் தோன்றும் சிந்தனைகளைக் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

நமது சமயமும் சமுதாயமும் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் பேரவை பல்கலைக் கழக வடிவத்தில், திருமடங்களின் தனித்தன்மைக்கு ஊறு இல்லாத வகையில் அதே பொழுது பொதுத் தன்மைக்கு இசைந்த வகையில் அமைக்கப்படுதல் வேண்டும். திருமடங்களிடையே பொதுத் தன்மைக்கு மாறாக வளர்ந்துள்ள தனித்தன்மை முற்றாக அகற்றப்பட வேண்டும். தன்னுரிமை உணர்வு சாய்க்கப்பட்டுப் பொதுமையுணர்வு மலர வேண்டும். திருமடங்களின் நிதியங்கள் முறையாக மையப்படுத்தப் பெறவேண்டும். அந்த நிதியங்களைக் கொண்டு சமயத்தைச் சார்ந்த மக்களிடையில் வாழ்வுப் பணியும் சமயப் பாதுகாப்புப் பணியும் முறைப்படுத்தப் பெற்றுச் செய்யப்பெறவேண்டும். இன்று, திருமடங்களைச் சார்ந்து மக்கள் மன்றத்தில் உலாவரும் தொண்டர்கள் இல்லை. அங்கேயே தொண்டர்களுக்குப் பஞ்சம்; தக்க இளைஞர்களைத் தவமும் சீலமுமுடையவர்களாக வளர்க்கும் பணிமனைகள் பல தேவை. திருஞானசம்பந்தருடன் பதினாயிரம் தொண்டர்கள் மதுரைக்கு வந்ததாகக் கூறுவர். இன்று நாட்டில் சமய உணர்வுடன் மக்கட் பணியை ஏற்றிருக்கும் துறவிகளின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. அதுவும் வழி வழி நிறுவனங்கள் சார்பில் இல்லையென்று கூறலாம். பலரிருக்க வேண்டிய இடத்தில் ஓரிருவர் இருப்பது, உளது போலக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இந்த நல்ல அமைப்பைத் தோற்றுவிக்க நம்முடைய திருமடங்களின் தலைவர்களே முன்வந்து ஏற்றருள வேண்டுமென்பது நம்முடைய பிரார்த்தனை. அவர்கள் அதை ஏற்றுச் செய்யத் தவறினால் நம்முடைய இளைஞர்கள், நம்முடைய அறிஞர்கள் விவிலியத்தின் மார்ட்டின் லூதர் போலப் புரட்சியைச் செய்தாவது அந்த நிலையை உருவாக்க வேண்டும். இது நமது விருப்பம், வேண்டுகோள்.