பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

81


என்பதும் திருவாசகம். எனவே நமது சமுதாயத்தைச் சேர்ந்த அனைவரையும் திருக்கோவில் வழிபாட்டில் கலந்து கொள்ளும்படி செய்யவேண்டும். அங்கு நிகழ வேண்டிய தொண்டுகளில் அவரவர் தகுதிக்கேற்பப் பங்கேற்கும்படி செய்யவேண்டும். அங்ஙனம் பங்கு கொள்ளத் தவறுபவர்கள் திருத்தி வழி நடத்தப்பெற வேண்டும். திருக்கோயில் திருப்பணிக்கு ‘யார் யார்’ வந்தார் என்று கணக்கெடுக்கும் முறை இருந்தது. ‘யார் யார் வந்தார்’ என்ற திருவிசைப் பாவினால் அறியலாம். முன்னர்க் கூறப்பட்ட முறையின் வழி சமய வழிப்பட்ட சமுதாயப் பணியைச் செய்யப் பயிற்சி பெற்ற துறவிகள் ஊர்ச்சபையின் இயக்குநர்களாக அமைவார்கள். ஊர்ச்சபை, அந்தக் கிராமத்திலுள்ள அனைத்து மக்களின் கல்வி வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, பிணி நீக்கம், நல்வாழ்க்கை அமைத்துத் தருதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும், கூட்டுறவு முறையில் தொழிலமைப்புகளைத் தோற்றுவித்து வாழ்க்கையில் வளம் காணச் செய்யும். கிராம சமுதாயத்தின் வளத்தைப் பெருக்கும்; சில வழக்குகளைத் தவிர்க்கும். ஒரோவழி மன மாறுபாடு தோன்றி விட்டால் தாமே தீர்வுகண்டு சமாதானம் செய்து வைக்கும் பணியையும் ஊர்ச்சபைகள் செய்யும், இந்த ஊர்ச்சபைகள் மாவட்டச் சபைகளோடு உறவு கொள்ளும். மாவட்டச் சபைகள் மாநில சபைகளோடு உறவு கொள்ளும். இந்தப் படிமுறையில் வளர்ந்தவுடன் எந்த ஓர் இந்துவும் அனாதையாக இருக்க மாட்டான் ஏழையாக இருக்கமாட்டான். அவனுடைய வாழ்க்கைக்குப் பாதுகாப்பு இருக்கும். எல்லோரும் கடவுளின் பிள்ளைகள். அவர்கள் திருக்கோயிலை மையமாகக் கொண்டு கலந்து மகிழ்ந்து வாழ்வார்கள். மத மாற்றங்களுக்கு ஆளாக மாட்டார்கள். நமது மரபுகள் காப்பாற்றப்படும். நமது சமயத் தலைவர்கள் இடத்தினால் மட்டுமன்றி இதயத்தினாலும் தலைவர்களாயிருப்பார்கள். ஞானாசிரியர்களாக இருப்பார்கள். திருத்தொண்டர்களாக இருப்பார்கள். உடைமைகளுக்கு