பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

83


குருபூசை விழாக் கொண்டாடும் பாத்திரங்களாக்கி உண்டி நாலு விதத்தால், அறுசுவையால் ஆர்ந்து மகிழ்கின்றனர். திருத்தொண்டர் புராணத்தின் பயனாகிய அன்பு வளர வில்லை; பக்தி வளரவில்லை; திருத்தொண்டு வளரவே இல்லை. நமது இனம் உயிர்ப்புள்ள இனமாக வளர்ந்திருக்கு மேயானால் அறுபான்மும்மை நாயன்மார்கள் செய்த திருத்தொண்டுகளையொட்டிய திருப்பணி இயக்கங்கள் தோன்றியிருக்க வேண்டும். கண்ணப்பர் காலத்திலேயே கண்ணொளி வழங்கும் இயக்கம் தோன்றியிருக்க வேண்டும்.

கண்ணப்பர் காலத்திலேயே நாயன்மார்கள் வரலாற்றில் பலமுனைச் செயற்பாடுகள் அமைந்திருந்தன; அறிவியல் நுணுக்கங்கள் அமைந்திருந்தன. ஆனால் அவற்றை எல்லாம் நாம் மறந்துவிட்டோம்; ஆதலால் நாடு பயனொன்றும் பெறவில்லை. கண்ணப்பர் வரலாற்றில் சிவபெருமானே வலியுறுத்திக் காட்டிய “எல்லாரும் வழிபாடு செய்து கொள்ளும் உரிமை”யைப் பெற்றோமில்லை. திருக்கோயில் உள்ளிருக்கும் சிவன்தன்னைச் சிவனெனவே தேறி உயிர்ப்புடன் வழிபடும் உணர்வும் வளரவில்லை. அங்ஙனம் வளர்ந்திருப்பின் இன்று திருவுருவச் சிலைகள் திருடு போகா. வருவாய் தரும் திருக் கோயில்களின் திருவுருச் சிலைகளைப்போன்று வருவாய் இல்லாத திருக்கோயில்களின் திருவுருவச் சிலைகளைக் கவனிப்பதில்லை. அங்கு அர்ச்சகர்களும் பணியாற்ற வேண்டிப் போட்டிபோட மறுக்கின்றனர். ஆதலால் உண்மையில் அவரவர் ஆவல்கள் தொழப்படுகின்றனவே தவிர ஆண்டவன் தொழப்படவில்லை; அகநிலை அன்பிலும் வளரவில்லை. “பிறிதின் நோய் தந்நோய் போல் போற்றும்” பண்பிலும் வளரவில்லை, சரி, பக்திதான் வளரவில்லை; அறிவியலாவது வளரக்கூடாதா? கண்ணப்பர் காலம் சற்றேறக்குறைய கி.மு. 42-க்கு முற்பட்டது என்று கூறு கின்றனர். அக்காலத்தில் ஒருவர் கண்ணைப் பிறர் ஒருவர்க்கு எடுத்து வைத்துக் கண்ணோய் தீர்க்கும் முறை உலகில் வேறு