பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தொகுப்புரை

நமது சமயம் இந்தியத் துணைக்கண்டத்தின் தனிச் சமயம். கோட்பாடுகளில் வேறுபாடுகளிருந்தாலும் உயர்ந்த ஒருமை நலம் கருதி இந்து சமயம் என்ற அமைப்பை ஏற்றுக் கொள்ளலாம். அவ்வழி நமது வாழ்வியலுக்கு ஒவ்வாத முரண்பாடுகளை அறவே அகற்றவும் வேண்டும்.

நமது சமயத்தில் சாதி வேறுபாடுகளின்றி அனைவரும் திருக்கோயிலில் வழிபாடு செய்துகொள்ளும் உரிமை இருந்தது. அன்று சிறுமையின் சின்னங்களாகிய எல்லைக் கோடுகள் இருந்ததில்லை. பழங்காலத் திருக்கோயில்களில் எல்லோரும் சென்று வழிபாடு செய்துகொள்ளும் உரிமையிருந்தது. ஒரு சிலர் இலாபம் கருதி இடையில் அந்த உரிமைகளைப் பறித்திருக்கிறார்கள். சிவாசாரியர்களின் கடமை திருக்கோயில் உள்ள இறைவடிவை வழிபாட்டுக் குரியதாகச் செய்துவைப்பதே! வடபுலத்திலுள்ளது போல அனைவரும் திருக்கோயில் கருவறைக்குள் சென்று புனலும் பூவுமிட்டு வழிபடும் உரிமையைக் கண்ணப்பர் பெயரால் அடைந்தே தீரவேண்டும். அவரவர் வழிபாடு செய்யும் பொழுதுதான் மெய்யுணர்வு அரும்ப முடியும்.

வழிபாட்டிற்குத் தமிழ் உரிய மொழி. இறைவனைத் தமிழால் பாடித் துதி செய்தல் நூறுகோடி அருச்சனைக்கு ஒப்பானது. அதனாலன்றோ இறைவன் சுந்தரரிடம் “அருச்சனை பாட்டே யாகும்” என்று அருளிச்செய்து பாடச் சொன்னான். தமிழோடு இசை கேட்கும் இச்சையால் நாளும் காசுகள் கொடுத்து அப்பர், சம்பந்தர் ஆகியோரின் தமிழைக் கேட்டிருக்கிறான். அங்ஙனம் இறைவன் விரும்பிக் கேட்ட தமிழைக் கேளாது தடை செய்ததனால்தான் போலும் திருக்கோயில்களில் திருவருள் விளக்கம் சிறப்பாக அமையவில்லை. இறைவனைத் தமிழில் வழிபாடு செய்து கொள்ளும் உரிமை நமது பிறப்புரிமை. அதை நாம் அடைந்தே