பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

87


தீரவேண்டும். தமிழ் வழிபாட்டு இயக்கம் மொழியியக்க மன்று. அதன் நோக்கம் பக்தியை வளர்ப்பதேயாகும். தமிழ் வழிபாட்டு இயக்கத்தை மாதவச் சிவஞான முனிவர் முதலிய சான்றோர்களும் ஆதரித்துள்ளனர்.

பழங்காலத் திருக்கோயில்கள் சமுதாயத்தின் கேந்திரங்கள். சமுதாயத்தைக் கண்ணின் இமைபோல் பாது காக்கும் நிறுவனங்களாக அவை விளங்கின. அதனால்தான் கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி பிறந்தது. இடைக்காலத்தில் நமது சமய நிறுவனங்களாகிய திருக்கோயில்களும் திருமடங்களும் இந்தப் பணிகளைச் செய்வதிலிருந்து விலகிவிட்டன. அண்மைக் காலத்தில் ஓரளவு மாறுதல் ஏற்பட்டு வருகிறது. இந்த வகையில் தருமபுரம் ஆதீனம் செய்துவரும் பணி பாராட்டுதலுக்குரியது. மேலும் திருப்பனந்தாள் காசிமடமும், பேரூர் சாந்தலிங்கர் திருமடமும், சிரவணபுரம் கெளமார மடமும், மயிலம் பொம்மபுரம் ஆதீனமும் செய்துவரும் பணிகள் நினைவுகூரத்தக்கன. ஆயினும், பணி செய்ய வேண்டிய வளம்பெற்ற திருமடங்கள் பல இன்னும் வாளா உறங்குகின்றன. இங்ஙனம் வளர்ந்துள்ள மாறுதல்கூட பணிகளின் தேவை அளவுக்குரிய மாறுதலன்று; வளத்தின் அளவுக்குரிய மாறுதலுமன்று.

நமது சமுதாயத்தில் சமய நிறுவனங்கள் ஆடம்பரமான வாழ்க்கை முறை-படாடோபமான திருவிழாக்கள் நடத்துகின்றன. அதேபோழ்து நமது சமுதாயத்தைச் சேர்ந்த பலகோடி மக்கள் ஊமையராய்ச்-செவிடராய்ப் பாழ்பட்டுப் புழுதியில் கிடப்பதைச் சமயத் தலைவர்கள் உணரத் தவறுகின்றனர். மக்களைத் தழுவி வளர்க்காத சமய நிறுவனங்கள் எதற்காக? நடமாடும் கோயில்களை நாடிப் போற்றாத நிறுவனங்கள் எதற்காக? என்ற வினாக்களை வரலாறு எழுப்பத்தான் செய்யும். இனி வரலாறு எழுப்ப இருக்கும் வினாக்கள் சொற்களாகத் தோன்றா; அருளியல்