பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வழிப்பட்ட புரட்சியாகத்தான் தோன்றும். அது சீரமைப்பைச் செய்தே தீரும்.

வல்லாண்மையுடையவர்களுக்கும் அஃதில்லாதவர் களுக்குமிடையே நடுவாக நின்று நீதியைக் காப்பாற்ற வேண்டிய சமயத் தலைவர்கள் வல்லாண்மையுடையவர் களோடு கூட்டுச் சேர்ந்துவிட்டனர். நடுவாக இருக்க வேண்டிய சமயத் தலைவர்கள் நடுவிகந்து வாழ்வோரிடையே கூடிக் குலவுகின்றனர். தொழுத கை துன்பம் துடைக்கும் தூயநெறியில்லை.

இந்த இடுக்கண் நிறைந்த சூழ்நிலையில் பேரவை தோன்றிற்று. பேரவை முறையாக வளர்ந்து வருகிறது. மக்கள் இயக்கமாக வளர்ந்து வருகிறது. ஆயினும், சமயத் தலைவர்கள் காட்டும் ஆர்வம் போதாது. மேலும் நிறைந்த ஆர்வம் காட்ட வேண்டும்.

சமயச் சார்பற்ற அரசு உடைமைகளைத்தான் காப்பாற்றும், உணர்வுகளைக் காப்பாற்ற முடியாது. ஆதலால், இந்து அறநிலையச் சட்டத்தின் ஆட்சிமுறை உடைமைகளைக் காப்பாற்றுகிறது. உணர்வுகளைக் காப்பாற்றவில்லை. ஆதலால் சமய உணர்வுகளையும் சமுதாயத்தையும் ஒருசேரக் காப்பாற்றும் அளவுக்குப் பேரவை பல்கலைக்கழக வடிவத்தில் தன்னாதிக்கமுள்ள நிறுவனமாக அமைய வேண்டும். அந்த அமைப்பு சமயச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும். சமுதாய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். திருமடங்களின் தலைவர்கள் காலத்திற்குத் தேவையான பொதுமைக்கு இசைந்து வரவேண்டும். இது தவிர்க்க முடியாத பணி.

ஒவ்வொரு திருக்கோயிலும் குடிகளைத் தழுவியதாக விளங்கவேண்டும். குடிகள் கோயிலைத் தழுவி வாழ வேண்டும். இந்தப் பொற்காலத்தை நாம் படைத்திட வேண்டுமாயின் நாயன்மார்கள் அடிச்சுவட்டில் பணிகளைத்