பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

91


வழக்கு பேசப் பெறுகிறது. “அறங்கரை நாவின் நான்மறை முற்றிய”[1] என்பது தொல்காப்பியப் பாயிரம். இந்நூற்பாவுக்கு உரை கண்ட உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர், “இருக்கும் யசுரும் சமமும் அதர்வணமும் என்பாருமுளர், இது - பொருந்தாது. இவர் இந்நூல் செய்த பின்னர், வேத வியாதர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாகச் செய்தார் ஆகலின்”[2] என்று எழுதும் உரை எண்ணுதலுக்குரியது. புறநானூற்றில் மிகத் தொன்மைக் காலத்துப் பாடல்களும் உள்ளன. வேத வியாதர் காலத்துக்கு முற்பட்ட பாடல்களும் உள்ளன. “நான்மறை முனிவர்”, “நால்வேத நெறி” எனவும் வரும் சொற்றொடர்கள், பழங்காலத்திய தமிழில் தமிழ் மறைகளிருந்தன என்பதை அறிவிப்பன. நமது திருமுறைகளில் மறையென்று கூறப்படுவன தமிழ் மறைகளேயாம். இது “பண்பொலி நான்மறை” என்றும் “முத்தமிழ் நான்மறை” என்றும் வரும் தமிழ் வழக்கினை ஒட்டிக் குறிப்பிடும் வகையால் அறியக் கிடக்கிறது. மாதவச் சிவஞான முனிவரும் “கொழிதமிழ் மறைப்பாடல்” என்று தமிழ் மறை உண்மையை எடுத்துக் காட்டுகின்றார். இந்தத் தமிழ் மறைகள் ஆலமர் செல்வனால் அருளிச்செய்யப் பெற்றவை என்றுதான் திருமுறைகள் பேசுகின்றன. இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் முதலிய வேதங்கள் இறைவனால் அருளிச்செய்யப் பெற்றன அல்ல. பல்வேறு முனிவர்களால் பல்வேறு காலங்களில் அருளிச் செய்யப் பெற்றவை. நமது சமய வரலாற்று அடிப்படையில் நமது சிவபெருமானும் உமையம்மையும் பேசுவது தமிழே தான்; அதனால்தான் வேதநெறி தழைத்தோங்கப் பிறந்த திருஞானசம்பந்தர், நமையாளும் உமையம்மையின் ஞானப் பாலுண்டவுடன்

‘தோடுடைய செவியன்’ என்று தூய தமிழிற் கவிதை பொழிந்தார். ஆதலால் நமது சமயத்திற்குப் பண்டு, தமிழ் மறைகளிருந்தன என்பது தெளிவு மறுக்க முடியாத உண்மை. ஆயினும், அந்த மறைகள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. அவை கடற்கோள் பட்டிருக்கவேண்டும். அம்மறை

  1. தொல்காப்பியம்-பாயிரம்
  2. தொல்காப்பியம்-பாயிரம் உரை