பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

93


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்[1]

என்று முறைப்படுத்திக் கூறுவார் மாணிக்கவாசகர். இத்தகைய ஒரு கொள்கையினையேதான் உயிரியல் விஞ்ஞானி டார்வினும் கண்டு உலகத்திற்குத் தந்தார். ஆனால், நமது சமயநெறி படிப்படியாகப் பல பிறப்புகளில் உயிர் வளர்ந்து வளர்ந்து மனிதப் பிறப்பையடைகிறது என்று வகுத்துரைக்கும். இதனைத் தொல்காப்பியர் வாயிலாக நாம் எளிதில் உணரமுடிகிறது. அவர் உயிரினத்தை அறுவகையாகப் பிரிக்கிறார்.

புல்லும் மரனும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

சிதலும் எறும்பும் மூவறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

நண்டும் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

மாவும் புள்ளும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

என்பது தொல்காப்பியம்[2] ஓரறிவுடைய உயிர்கள் அந்த ஓரறிவில் முழுமையாக வளர்ந்து, உருமாறி (இறப்பு, பிறப்பின்

  1. திருவாசகம்-சிவபுராணம் 26-31.
  2. தொல்காப்பியம், மரபியல், 28, 29, 30, 31, 32, 33,