பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

89


மாவடுவும், செங்கீரையும் எடுத்துச் சென்று திருவமுது செய்விக்கும் கடப்பாட்டினை யுடையராயிருந்தனர் என்றும் பெரியபுராணம் கூறுகிறது.”23

அடுத்து, திருஞான சம்பந்தர் தாம் குறிப்பிட்ட பயன் எனக்கண்டு வீழ்ந்து வணங்கிய கண்ணப்பர் வரலாறு, தக்க சான்று. கண்ணப்பர் வரலாற்றை “அதிதீவிரமான வல்வினை யின்பாற்பட்டதென்றும், அதனால் அது பொது விதியன்று” என்றும் சிலர் கூறுவர். அது உண்மையன்று. கண்ணப்பர்க்கு வழிபடுதலுக்குரிய வாய்ப்புக் கிடைத்ததால் பெருமானே திருக்கண் நோக்கால் தீக்கை (நயனதிக்கை) செய்து வைக்கும்24 பெரும்பேறு பெற்றார். பிறகு வழிபாட்டின் பயனாகப் பெருகிய அன்பில் அவர் அதிதீவிரமானார். நாம் அவருக்குத் தடையின்றி வழிபடக் கிடைத்த வாய்ப்பையே இங்கு எடுத்துக்காட்ட விரும்புகின்றோம். கண்ணப்பர் திருக்கோயிலுக்குள் சென்று, திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள காளத்தி யப்பரைத் தழுவி உச்சி மோந்தார். இந்த வாய்ப்பு அவருக்குக் கிடைக்காது போயிருக்குமாயின், அவரை “கண்ணப்பராகக்” கண்டிருக்க இயலாது. திருக்காளத்திக் கோயிலில் சிவகோசரியார் என்னும் சிவாச்சாரியார் ஆகம விதிப்படி பூசை செய்தார் என்றும் சேக்கிழார் கூறுகிறார்.25 ஆனாலும், மற்றவர்கள் திருக்கோயிலுக்கு வந்து பூசனை செய்து கொள்வதற்குத் தடையில்லாதிருந்திருக்கிறது. மறுநாள் சிவகோசரியார் வந்து வருந்தும் பொழுது கூட, ‘பூசனை செய்தவர் யார்?’ என்ற கேள்வி எழவில்லை. மற்றவர் பூசை செய்வதற்குரிய உரிமையில்லாதிருக்குமாயின் சிவகோசரியார், பூசை செய்தவர் யார் என்று வினவித் தெரிந்து கொண்டிருப்பார். “இந்த அனுசிதம் கெட்டேன் யார் செய்தார்”26 என்று மட்டும் கேட்டதால் மற்றவர் பூசை செய்வதற்குரிய உரிமை இருந்தது என்பது புலனாகிறது. சிவகோசரியார் தாம் பூசனை செய்வதற்கு முன்பு, இறைவர்

கு.XII.7.