பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



சைவ சித்தாந்தமும் மார்க்சியமும்

“சைவ சித்தாந்தமும் மார்க்சியமும்” என்பது, இந்தத் தலைமுறையில் சிந்திக்கவேண்டிய ஒன்றாகும். நமது சைவ சித்தாந்த நூல்கள் பரபக்கத்தில் எடுத்து ஆய்வு செய்து மறுக்கின்ற புறப்புறச் சமயங்களுள் தத்துவங்களுள் மார்க்சியம் இல்லை. ஆனால், மார்க்சியத்திற்கு முன்னோடியாகவுள்ள உலகாயதம் (சார்வாகம்) எடுத்து ஆய்வு செய்யப் பெற்றிருக்கிறது. உலகாயதத்தின் வளர்ச்சியே மார்க்சியம். இங்கு வளர்ச்சி என்பது, ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் உள்ளடக்கியதேயாம்.

சித்தாந்த நூல்களில் உலகாயதம் என்று ஆய்வு செய்யப்பெற்ற கொள்கை, காலந்தோறும் வளர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மார்க்சிமாக விஞ்ஞான பூர்வமாக வளர்க்கப்பெற்றுச் செழுமையடைந்து வளர்ந்துள்ளது. மேலும் மார்க்சின் தத்துவங்கள் விரிவான ஆய்வும் விளக்கமும் பெற்று உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தப் பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் மார்க்சியம் நடைமுறை வாழ்க்கை விஞ்ஞானமாகவும் உருப்பெற்று விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மெய்கண்டார் அருளிச் செய்த சிவஞானபோதத்திற்கு வழி நூல்கள் பல தோன்றினாலும் அவ்வழி நூல்கள் முதல் நூலில் நுண்பொருளாகச் சொல்லப் பெற்ற செய்திகளை எளிமைப்படுத்தும் முயற்சியிலேயே ஈடுபட்டன. மாதவச் சிவஞான முனிவர் உரை விளக்கம் எழுதி, சிவஞான போதத்தை விளக்கமுறப் பயிலத் துணைசெய்தார். எனினும், சித்தாந்தச் சைவத்தைத் தனியொரு நெறியாகப் பேணி வளர்க்கவும் சித்தாந்தச் சைவ நெறியை வாழ்க்கை நெறியாக உருக்கொடுக்கவும் நாம் தவறியது ஒரு குறையேயாம். இன்றாவது, கடவுள் மறுப்பு இயக்கங்கள் எதனால்