பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாக ஆங்கிலம் கற்க நேரிட்டால் - அவருக்குத் தமிழில் பேசவும் எழுதவும் வராது. ஆங்கிலம் மட்டுமே வரும். ஆதலால், மாற்றிக்கொள்ளக் கூடியனவெல்லாம் உயிரைச் சார்ந்த பந்தங்களல்ல. அது மட்டுமன்றி-ஒரு மனிதன் எல்லா மொழிகளையும் கற்கவும் முடியும்; எல்லா நாட்டு மாந்தனாகவும் முடியும். ஆதலால், நாடு, மொழி, இனம், மதம் ஆகிய வேறுபாடுகளை மையமாகக் கொண்டு மானிட உலகத்தைப் பிரிக்கக்கூடாது என்பது மார்க்சியம். இயற்கையிலமைந்த தொழில் செய்யும் ஆற்றல், செய்யும் தொழில் மூலம் உலகத்தை இயக்குதல், செய்யும் தொழில் மூலம் உலக இயக்கத்துக்கு-வரலாற்றுக்கு உந்து சக்தியாக இருத்தல் ஆகியன அனைத்துலக மானிட சாதிக்கும் பொதுமை. எனவே உயிர்க் குலத்தை ஒருங்கிணைப்பது தொழில். இதுவே மார்க்சியம். சைவ சித்தாந்தத்திலும் உயிர்க்குலம்,

“அவன், அவள், அது”17

என்றே பேசப்பெறுகிறது. சிவஞான போதத்தில் நாடு, மொழி, சாதி, இனம் பற்றிய சொற்கள் பயிலாமையைக் கூர்ந்தறிக.

“ஐம்புல வேடரின் அயர்ந்த்னை”18

என்றும்

“நண்ணனல் வேவாத நற்றவர் தம்மினும்
மண்ணமர மாச்செலுத்தும் பாகரினும்” 19

என்றும் ஒரே வழி பயின்றிருப்பினும் தொழிற் குறிப்பின் வழியிலேயாம். பிறப்பின் அடிப்படையிலன்று.

உயிர்களுக்கு முன்னோடியாக - தலைவனாக - விளங்கும் இறைவனும் - தொழிலியற்றும் தலைவனாகவே பேசப்படுகிறான். அதுவும் தற்சார்பு இல்லாத சமூகப் பொது உழைப்பாக உயிர்களின் நலம் கருதியே தொழிலியற்றும் தலைவனாகப் பேசப்பட்டிருத்தல் சிறப்பு. மெய்கண்ட நூல்களுள் ஒன்றாகிய - திருக்களிற்றுப்படியார்,