பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொருளாகக் கடவுள் இருக்கிறான் என்று சொன்னதே தவிர, கடவுள் உலகத்தைப் படைத்தான் என்று சொல்லவில்லை.

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”.30

சைவ சித்தாந்தத்திலும் கூடக் கடவுளது திருவருட் சத்தியின் இயக்கத்தால் “மாயை” என்னும் அருவப் பொருளிலிருந்து உலகம் தோன்றி விரிவடைகிறது என்பதே கருத்து. என்றும் உளதாய் அருவமாய் ஒரு நிலையதாய் விளங்குவது மாயை என்று சித்தி கூறுகிறது.

“நித்தமாய் அருவாய்ஏக நிலையதாய் உலகத்திற்கோர்
வித்துமாய் அசித்தாய் எங்கும் வியாபியாய் விமலனுக்கோர்
சத்தியாய்ப் புவனபோகம் தனுகர ணமும் உயிர்க்காய்
வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யு மன்றே”31

என்பது காண்க.

ஆதலால் உலகம் இயற்கை. அது உள்பொருள்; உண்மையானது. இந்த உலகிலேயே உயிர்களுக்குத் துய்ப்பனவும் உய்ப்பனவும் கிடைக்கின்றன என்கிற கருத்தில் இரு தத்துவ இயல்களும் ஒத்து நிற்பதை ஓர்ந்தறிக.

வாழ்க்கை வாழ்வதற்கே!

உலகில் சில சமயங்கள் கூறுவதுபோல் சித்தாந்தச் சமயம், வாழ்க்கையை எள்ளுவதுமில்லை; பழிப்பதுமில்லை. இந்த மானிட வாழ்க்கை அரியது; போற்றுதலுக்குரியது; பயன்பாடுடையது என்றே சைவ நூல்கள் கூறுகின்றன.

“வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி
மதித்திடு மின்”32