பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

129



“மேன்மைகொள் சைவநீதி விளங்குக
உலகமெல்லாம்”41

நீதி என்பது என்ன? சட்டங்கள், சாத்திரங்களின்படி வழங்கப்படுவது நீதியா? அவையிரண்டுமே கூடத் தற்சார்பு காரணமாக நெறிமுறை பிறழ்ந்தவர்களால் இயற்றப்படும் பொழுது, அங்கே எப்படி உண்மையான நீதியைக் காண முடியும்? எனவே,

“உங்களுடைய (பூர்ஷீவா) சட்ட நீதித் தொகுப்பு என்பது உங்களுடைய விருப்பக்கருத்தைத் தவிர வேறில்லை. அவைகளை எல்லாருக்குமான சட்டங்களாக நீங்கள் ஆக்கி வைத்துள்ளீர்கள். உங்களுடைய அந்த விருப்பம் என்பது அவைகளின் சாராம்சமான இயல்பும் திசைவழியும் உங்கள் வர்க்கத்தின் நிலைப்பாட்டின் பொருளாதார நிலைமைகளினால் நிர்ணயிக்கப்பட்டு முடிவு செய்யப்படுகின்றன.”41

என்று மார்க்ஸ் கூறுவது அறியத்தக்கது. எனவே எல்லா உயிர்களும், அனைத்துலகத்தின் மானிடவர்க்கமும் மகிழ்ந்து வாழ்வதற்குரியவாறு அமைவினை உண்டாக்கத் துணையாயிருப்பது நீதி. இதனைச் சமூகநீதி (Social Justice) என்பர். இந்த நீதியை ஒருவன் கேட்டுப் பெறுவதில்லை. இயல்பாகவே அவனுக்குக் கிடைப்பதே நீதி. இந்த உயர்ந்த நீதி உலகத்தின் நடைமுறை ஒழுக்கமாகுமானால் கலகம் ஒடுங்கும்; போர் ஒடுங்கும், மண்ணகம் விண்ணகமாகும். இத்தகைய நீதியை நிலை நாட்டுவதில் சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் கைகோத்து நிற்பது களிப்பைத் தருகிறது.

மனித உரிமையை மதிக்கும் தத்துவங்கள்

சைவ சித்தாந்த நூல்களில் முடியுடை மன்னராட்சி பற்றிய விரிவான ஆய்வு இல்லை. அஃது அவர்கள் காலத்துத் தேவையாக அமையவில்லை. காரணம், கிராமங்களும் குடும்பங்களும் தன்னாட்சி உரிமை பெற்றிருந்தன;