பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உடற்கருவியின் ஒத்துழைப்புத் தேவை. வளமான வாழ்க்கை காண, வளமான உடல்நலம் தேவை.

உடல் நலத்திற்குத் துணை செய்வது அகநிலை உணர்வுமாகும். மனம், இன்றைக்கு எல்லா மட்டங்களிலும் முதல் நிலைப்படுத்திப் பேசப்பெறுகிறது. வள்ளுவமும் “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்” என்கிறது. “மனத்துய்மையாய் இருப்பதனால் பத்து மனிதர்களின் பலத்தை அடையக் கூடும்” என்று டென்னிசன் கூறுகிறார். மனம் மாசுறுவது எங்ஙனம்: மனத்துக்கு இயல்பாக மாசு இல்லை. சார்புகளின் காரணமாக மனம் மாசுறுகிறது. மனத்தின் சார்பை நன்றின்பால் உடையதாக்கவேண்டும்! “நன்மை செய்வதே தூய்மையாய் இருப்பது” என்பது அனுபவ வாக்கு. அது எளிதான காரியமன்று. மிகக் கடுமையாகச் செய்யவேண்டிய முயற்சி. இதனை,

“சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு”

என்று வள்ளுவம் கூறும்.

நன்று இது, தீது இது எனப் பகுத்து அறிந்து நன்றின்பால் உய்த்துச் செலுத்துகின்ற அறிவு தேவை. அறிவை எங்ஙனம் பெறுவது? அறிவு, பல திறத்தது. ஒன்று, இயற்கை நடைமுறை; வாழ்க்கையில் படிப்பினைகள் மூலம் பெறும் அறிவு. இதனைப் பட்டறிவு என்பர். “சிந்தித்து உணர்பவருக்கு நேற்றைய அனுபவம் இன்றைய ஆசிரியன்” என்பது பழமொழி. பிறிதொருவகை அறிவு, வாழ்க்கையில் நிறைந்த பட்டறிவினைப் பெற்ற ஆசிரியர்கள் எழுதிய நூல்களைக் கற்பதன்மூலம் பெறும் அறிவு. நூல்கள் வழி ஒரு கருத்து உருக்கொள்வதற்குப் பலநூறு ஆண்டுகள் பிடிக்கும் என்பதை உய்த்துணரும் பொழுதுதான் நூலின் அருமைப்பாடு தெரியும். வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவத்தையும் நாமே பட்டறிவதற்குப் பதில் நமக்கு முந்தி வாழ்ந்தோர் பட்ட