பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


படிகளில் நிறைய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது; மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆயினும் புறச்சார்பில் இவ்வளவு வளர்ந்து வந்துள்ள மானுடம், உடன்சார உள்ள வாழ்க்கையையும், ஆன்ம வாழ்க்கையும் வளர்த்துக் கொண்டு வந்திருப்பின் மானுட வாழ்க்கை வெற்றி பெற்றிருக்கும்; முழுமை யடைந்திருக்கும்; நிறைநலம் அடைந்திருக்கும். ஆனால் அந்த ஒன்றுதான் நடந்துவிடவில்லை. மானுடம் கையாளும் கருவிகள் மாறியிருக்கின்றன. கருவிகளைக் கையாளும் மானுடத்தின் சிந்தனையில், அகநிலை நாகரிகத்தில் போதிய வளர்ச்சி இல்லை; போதிய மாற்றமில்லை. அதன் விளைவு, இன்று உலகு போர்ப் பயத்தால் அவலப்பட்டுக் கொண்டிருக்கிறது. மானுடத்தின் அகநிலை வாழ்வு வெற்றி பெறுமானால் எளிதில் வளமான வாழ்க்கையைக் கண்டுவிட முடியும்.

இதற்குச் சென்ற கால வரலாற்றையும் சென்றகால வரலாற்றின் நாயகர்களாக இருந்தவர்கள் தமது பட்டறிவினால் எழுதித் தந்த இலக்கியங்களையும் நாம் கற்றறிதல் வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் வீழ்ந்த இடத்தில் நாம் எழுந்து நிற்க முடியும். அவர்கள் நின்ற இடத்திலிருந்து நம்முடைய பயணத்தைத் தொடங்கமுடியும். இதற்கு நூல்களைக் கற்றல் தேவை. வளமான வாழ்க்கைக்குத் தடையாக இருக்கின்ற குற்றங்குறைகள் நீங்குவதற்கு நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்பது கடமை. அடுத்து நம்மைச் சுற்றி, இயங்கிக் கொண்டிருக்கின்ற இயற்கை உலகத்தையும் அவற்றின் நிகழ்வுகளையும் கூர்ந்து நோக்கிக் கற்றல் வேண்டும். இதனையே ‘கண்டதைப் படித்தல்’ என்பர் நம்முடைய ஆன்றோர். இயற்கையைக் கூர்ந்து கற்றறிகின்ற அறிவியலும், நன்னூல்களைக் கற்றறிகின்ற நூலறிவும், நாமே நம்முடைய வாழ்க்கையை அன்றாடம் உய்ந்தறிந்து உணர்கின்ற பட்டறிவும் வாழ்க்கையை வளமாக்கத் துணை செய்யும். வாழ்க்கையை வளமாக்குவதற்குரிய நல்ல