பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

அடிகளாரின் ஆன்மிகச் சிந்தனைகள் சமுதாயம் தழுவிய சிந்தனைகள் என்பதால் அடிகளார் ‘சமுதாய மாமுனிவர்’ என்று அழைக்கப்பட்டார்.

மனித வாழ்வு உழைப்பினாலானது. ‘உண்ணும் உணவைத் தங்கள் கடின உழைப்பால் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்துப் படைத்து உண்பவர்கள் நல்லவர்கள், உத்தமர்கள்’ என்பார் அடிகளார்.

மனித குலத்தில் யாராவது சிலர் உழைக்காமல் வாழ்ந்தால் அவர்களுடைய உழைப்பின் பங்கை மற்றவர்கள் சுமக்க வேண்டிய நிலை ஏற்படும். இது தவறான முறை. இதைச் ‘சாபக்கேடு’ என்பார்.

உழைப்பு இரண்டு வகைப்படும். ஒன்று அறிவுழைப்பு, மற்றது உடலுழைப்பு. இவ்விரண்டு உழைப்புகளிலும் உயர்ந்தது, தாழ்ந்தது என்பது கிடையாது. எனினும், காலப்போக்கில் உடல் உழைப்பு இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு, அறிவுழைப்பாளர்கள் உயர்ந்தவர்களாக மதிக்கப்படுதல் நெறியன்று என்பது அடிகளார் கருத்து.

ஊழ் (விதி) துணை இல்லாது போனால் காரியம் கைகூடாது என்னும் மூடநம்பிக்கை இன்றைய சமுதாயத்தைக் கெடுத்துள்ளதைக் கண்டு மனம் வருந்தினார். ‘ஊழினை வெற்றிபெறப் பழக்கங்களை, வழக்கங்களை வெற்றிபெற வேண்டும்’ என அறிவுறுத்தினார்.

உணவு, உடை, உறையுள் ஆகிய அடிப்படைத் தேவைகள் உழைப்பின் அடிப்படையில் கிடைக்கப் பெறுதல் வேண்டும் என்று வற்புறுத்திய அடிகளார் சமுதாயத்தின் பொருளாதாரம் பற்றியும் சிந்தித்தார்.

‘பொருளாதாரம் என்பதன் முழுப்பொருள் பணமுடை யோராதல் அல்ல, சொத்துடையோராதல் அல்ல. வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதாகும். பொருளுக்காக வாழ்க்கையல்ல, வாழ்க்கைக்காகவே பொருள். பொருளாதாரம் உயர்ந்து வாழ்க்கைத் தரமும் உயர்ந்து விளங்கினால்தான் பாதுகாப்புக் கிடைக்கும், சமாதானமும் அமைதியும் கிடைக்கும்’ என்பதை அடிகளார் என்றுமே மறந்தவரல்லர்.

சமநிலையற்ற பொருளாதாரத்தின் விளைவாக நாட்டில் வறுமை மலிந்து விட்ட நிலை கண்டு மனமுருகியவர் அவர். ‘வறுமையையும் ஏழ்மையையும் தொடர்ந்து போராடி அகற்றாத