பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

149


இனிச் சொல்ல இருக்கும் பேறுகளை அடையவும், துணை செய்வது பொருளே. வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாதது. பொருள் இருவகையினது. ஒன்று நேரிடையாக நுகரும் பொருள். பிறிதொன்று அணிகலனாகப் பயன்படுவது; சேம வைப்பில் வைத்திருந்து இயற்புழி எல்லாம் எடுத்துப் பயன்படுத்தக் கூடியது கிய பொன், நாணயம் முதலியன. உடம்போடு கூடிய வாழ்க்கைக்கு நுகர் பொருள் இன்றியையாதது. முறையான பல்வகைச் சத்தும் உடைய நல்லுணவு நோயற்ற வாழ்க்கைக்குத் தேவை. அது மட்டுமன்று; உடல் உழைப்பின் திறனைக் கூட்டுவதற்கும் தேவை. சுவைக்காக உண்பது ஒரோ வழி தான் ஏற்புடையது. உடல் நலத்திற்கும் உடல் உழைப்புத் திறனைப் பெருக்கிக் கொள்வதற்கும் உரியவாறு தேர்ந்து உண்பதே நல்லுணவு. உணவிற் சிறந்தவை காய்கனிகளும் பருப்பு வகைகளுமாம். இவை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கக்கூடிய வாழ்க்கை வளமானதாகும்.

இக்கருத்தினைக் கொண்டுதான் திருக்குறள் ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று கூறியது. இங்கு கூறிய பொருள்கள் நுகர் பொருள்களேயாம் என்பதை அறிக. ஒரோவழி பொன்; நாணயம் என்று கொண்டாலும் பிழையில்லை. பொருள் முட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை புதிய ஊக்கத்தினையும் திறன்களையும் தரும். பொருள் வளம் பெறாத வறுமை வாழ்க்கை அறிவை இழக்கச் செய்வதுடன் நற்குணங்களையும் இழக்கச் செய்யும். இந்தியா ஒரு வளர்ந்த நாடாக இருந்தாலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறவர்கள் எண்ணிக்கையும் மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கிறது.

அதனால், நம்முடைய அறிவியல் திறனும் உழைக்கும் மக்கள் திறனும் வீணாகிப் போகின்றன. நாட்டின் ஒட்டு மொத்தமான பொருளியல் நிலை ஒவ்வொருவரையும் பாதிக்கும் - வாழ்க்கை வளமாக அமைய, நாடு வளமாக