பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

151


வேண்டும் என்ற மாறா விதிகளில் நம்பிக்கையுடையவராக வாழ்தல், ஊழ்த்தத்துவத்தால் விளையும் தீமையாகும். இடைக்காலத்தில் இந்தத் தீமை நம்முடைய சமுதாயத்தினரில் பெரும்பான்மையோரைப் பற்றியிருக்கிறது. அதனாலேயே நம்முடைய சமுதாயம் எழுந்திருக்க முடியாமல் படுத்துக்கிடக்கிறது. இத்தகைய மூட நம்பிக்கைகள் விளைவித்ததே வறுமைக்கோடு, தீண்டாமை முதலிய சாபக்கேடுகள். ஆதலால், சீரோடும் சிறப்போடும் கூடிய வளமான வாழ்வு காண, நல்லனவே எண்ணுவோம். உயிர்த்துடிப்புள்ள செயல்களை மேற்கொள்வோம். ஊழை நல்லூழாக்குவோம். அவ்வழி வளமான வாழ்வு அமையும்.

நுகர்தல், வாழ்க்கையின் இன்றியமையாச் செயற்பாடுகளில் ஒன்று. உடம்பு, நுகர்வுக்குரிய பொறிகளோடும் புலன்களோடும் அமைந்திருக்கிறது. உணர்ச்சி வசப்படாமல் ஆசைகளின் வழிப்பட்டு அலைமோதாமல் நுகர்ந்து வாழ்தல் என்பது ஓர் இனிய கலை; வாழ்க்கைக் கலை.

“மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்”

என்ற குறள் நுகர்தலின் செவ்விய திறனைப் புலப்படுத்துகிறது. ஐம்பொறிகளும் சுவைத்தற்குரிய பொறிகளேயாம். மனமாறுபாடின்றி, சுவைக்கப்படும் பொருளுக்குச் சேதமில்லாமல், நெறிமுறை பிறழாத நிலையில் சுவைத்தல் அறநெறி சார்ந்த நுகர்தலாகும். முறையான நுகர்வு உடல் நலம் தரும்; மனநலம் சேர்க்கும்; மகிழ்வைத் தரும்; அமைதியை நல்கும்; இன்பம் வந்தமையச் செய்யும். நுகர்வுக்குரிய பொறிகளை முறையாகப் பேணுதலும் நுகரத் தக்கனவற்றை நுகர்தலும் வளமான வாழ்க்கைக்குத் துணை செய்யும். நுகருமாறு நுகர்ந்து வளமான வாழ்வைக் காண்போமாக!