பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அழகு, நல்வாழ்க்கை வாழ்வோர் போற்றுபவைகளுள் தலையாயது. அழகு, ஐம்பொறிகளுக்கும் விருந்தாக அமைவது; குளுமையூட்டுவது; மகிழ்ச்சியைத் தருவது. “கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பு” என்று நக்கீரர் பாராட்டுவார். அழகை ஆராதனை செய்யாதவர் யார்? இயற்கையே அழகு. இயற்கையில் அழகைக் கண்டு அழகுக்கு அழகாக நிற்கும் இறைவனை வணங்கிய ஞானிகள் உண்டு.

“பார்க்கின்ற மலரூடு நீயேயிருத்தி; அப்
பனிமலர் எடுக்க மனமும் நண்ணேன்”

என்றார் தாயுமானவர். உடம்பை அழகாகப் பேணி வைத்துக் கொள்ளவேண்டும். உழைக்கும் உடம்பு இயல்பாகவே அழகு பெறும். அளவான உழைப்பும் மிதமான நுகர்வும் கொள்வோர் உடல், என்றும் அழகாக இருக்கும். நோயின்மை அழகுக்கு அரண். சிரித்து மகிழ்ந்து வாழ்தலும் அழகுக்குத் துணை செய்யும். விருப்பு, வெறுப்புகளிலிருந்தும் காய்தல் உவத்தலிலிருந்தும் விடுபட்டு நடுநிலை நின்று ஒழுகுவார் அழகு பெறுவர். உடல் அழகுக்குச் சித்தமும் அழகாக இருக்கவேண்டும். அதாவது சிந்திக்கும் உறுப்பு நல்ல சிந்தனைகளைச் சிந்திக்க வேண்டும். “சித்தம் அழகியார்” என்று திருவாசகம் ஓதும். அழகு ஆயிரம் காரியத்தைச் சாதிக்கும். ஆதலால், அழகைப் பேணுவோமாக! பூச்சுக்களால் - ஒப்பனைகளால் பெறுவது இயற்கை அழகன்று. இயற்கையழகே அழகு. அழகு, அகநிலையிலும் புறநிலையிலும் வளமான வாழ்க்கையைப் படைக்கும். எண்ணிய எண்ணியாங்கு எய்தத் துணை செய்யும். வீட்டை அழகு படுத்துங்கள்! ஊரை அழகு படுத்துங்கள்! அழகான தோற்றத்தினை அடையுங்கள்! சிந்தையில் அழகு போற்றுங்கள்! வளமான வாழ்வு அமையும்.

வளமான வாழ்க்கைக்குப் பெருமை வேண்டும். பெருமையாவது மற்றவர்கள் புகழ்ந்து போற்றத்தக்க பெருந்