பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சோவியத் நாட்டு மக்களின் வாழ்நாள் வளர்ந்து கொண்டே போகிறது. இந்தியாவில் 1935-37இல் சராசரி வயது 17 ஆகத்தான் இருந்தது. இப்பொழுது 58 ஆக உயர்ந்திருக்கிறது. இனிமேலும் உயரும். ஆக, நீண்ட நாட்கள் வாழ ஆசைப்படுதல் வேண்டும். அதற்கேற்றாற்போல வாழும் நெறிமுறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். நோயற்ற நிலையில், வாழ்க்கை முடியும் காலம் வரையில் திடமான உடலுடன் உழைத்து, உண்ணும் முயற்சியுடையராக வாழ்தல் வேண்டும். இதற்கு, உடலுக்கு உழைப்பு, தரமான நல்லுணவு, துய்மையான தண்ணீர், துய்மையான காற்று ஆகியன தேவை. இவற்றுடன் நல்லெண்ணம், நற்சிந்தனை, அன்பினைக் கடமையாகக் கொண்ட வாழ்க்கை தேவை.

நாள்தோறும் நல்ல வண்ணம் ஓய்வெடுத்துக் கொள்ளும் பழக்கமும் தூங்கும் பழக்கமும் தேவை. உணவு மிகினும் குறையினும் நோய் செய்தல் போலவே, தூக்கமும் மிகினும் குறையினும் நோய் செய்யும். எந்தச் சூழ்நிலையிலும் அமைதியும் சாந்தமும் தழுவிய அணுகுமுறை இதயத்தைப் பாதிக்காமல் காப்பாற்றும். வாழ்நாளைச் செயற்கை முறையில் தற்கொலை மூலமோ, கொலை மூலமோ குறைப்பது பாபம். அதுபோலவே வாழ்நாளை அற்பமாகக் கருதுவதும், “நாம் வாழ்ந்து என்ன ஆகப் போகிறது?” என்று எண்ணுவதும் பிழை. அதே போழ்து ஒன்றை நினைவிற் கொள்ளுதல் வேண்டும். மிக அதிகமான நாட்கள் வாழ்ந்தால் மட்டும் போதாது. வாழும் நாள் அளவும், பயன்பாடுடையதாக அமைய வேண்டும். பயன்பாடிலாத ஊன் பொதி சுமக்கும் வாழ்க்கை, ஆண்டுகள் பலவாய் அமைந்து என்ன பயன்? ஆக, வளமான வாழ்க்கை பெற “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்” என்ற திருமுறை வாக்குப்படி வாழ்க்கையை மதித்து வாழ்வாங்கு வாழ்ந்திடக் கற்றுக் கொள்ள வேண்டும்.