பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

161



திருவள்ளுவர், வாழும் நெறிகளைப் பெரும்பாலும் உடன்பாட்டு முறையிலேயே கூறியுள்ளார். மிகச் சிலவற்றையே எதிர்மறையாகக் கூறி விளக்கியுள்ளார். அவற்றுள் நாணுடைமை என்பதும் ஒன்று. நாணுடைமை என்பது பழிக்கு அஞ்சுதல். புகழுக்கு எதிர்மறை பழி.

“புகழ்எனின் உயிரும் கொடுக்குவர்
பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்”

என்பது புறநானூறு. நாணுதலாவது பிறர் பழிக்கத்தக்க செயல்களைச் செய்ய வெட்கப்படுதல். உயிர்த் தொகுதியிலிருந்து மனித இனத்தைப் பிரித்துக் காட்டுவது நாணுடைமை என்ற ஒழுக்கமேயாம். நாணமுடையார் தம்பழி மட்டும் நாணுதல் செய்யார்; பிறர் பழிக்கும் நாணுதல் செய்வார். நாணம் மேற்கொண்டதன் காரணமாகச் செய்யத் தகாதவற்றைச் செய்யாமையும், செய்யத் தக்கனவற்றைச் செய்தலுமாகிய உணர்வுகள் மேலோங்குகின்றன. அழுக்காறு, அவா, வெகுளி முதலியனவும் தன் முனைப்பு, புறம் பேசுதல், பழிக்குப் பழி வாங்குதல் ஆகியனவும் நாணத்தக்கன. இத்தகைய தீய - குணங்களிலிருந்தும், அவ்வழிப்பட்ட தீய செயல்களிலிருந்தும் விடுதலை பெறுதல் வாழ்க்கை என்ற கழனிக்குக் களை எடுத்தது போலாம். நாணுடைமை வளமான வாழ்க்கைக்குத் துணை செய்வது.

அன்பு, செயற்பாட்டுத் தன்மையுடையது. அன்பினால் விளையும் செயற்பாடுகள் ஈதல், ஒப்புரவறிதல் முதலியன. ஈதல் முதல்நிலை, ஒப்புரவறிதல் ஈதலின் முதிர்ச்சி நிலை. வான்மழை வையகத்தை வளப்படுத்துவதுபோல, ஒப்புரவறிதல் மனித குலத்தை தழைத்து வளரச் செய்யும். ஒப்புரவறிதல் போலப் பிறிதொரு கோட்பாட்டை வானவர் உலகத்திலும் காண்பதரிது; இந்த மண்ணிலும் காண்பதரிது. தன்னோடு சார்ந்து வாழ்வாரின் நலமறிந்து அவர்தம் இயல்புகளோடு